“எம்ஜிஆர் -க்கு எதிராக, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செயல்பாடுகள்” என்று, ஈபிஎஸ் தரப்பினர் பகிரங்கமாக குற்றசாட்டி உள்ளனர்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தான், கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்காக இருந்து கொண்டு இருக்கிறது.

அதிமுகவில் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம், தமிழ்நாட்டு அரசியலில் தற்போது அடுத்தடுத்து புயல் காற்றாக மாறி, அனல் காற்றாக வீசக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக, அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் என்று, 2 பிரிவுகளாக பிரிந்து, இரு தரப்பினரும் எதிரிகளைப் போல் பாவனை செய்து வரும் சம்பவங்கள் எல்லாம் தற்போது ஒவ்வொன்றாக அரங்கேறத் தொடங்கி உள்ளன.

இந்த விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், “ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது” என்று, இபிஎஸ் நேற்றைய தினம் வெளிப்படையாக கடிதம் எழுதி இருந்தது, அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

குறிப்பாக, “தலைமைக்‌ கழக நிர்வாகிகள்‌ ஆலோசனைக்‌ கூட்டத்திற்கு புறக்கணித்த நிலையில்‌, தற்போதைய தங்களின்‌ இந்தக்‌ கடிதம்‌ ஏற்படையதாக இல்லை என்றும், கட்சியை செயல்படாத நிலைக்குக்‌ கொண்டு செல்வதற்கான அனைத்துப்‌ பணிகளையும்‌ செய்தீர்கள்” என்று, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கடிதம் எழுதி, எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் “அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்” என குறிப்பிட்டு இருந்ததை, தனக்குத் தானே எடப்பாடி பழனிசாமி அதனை நீக்கி விட்டு, தனக்குத் தானே புதிய பொறுப்புகளையும் கொடுத்துக்கொண்டு உள்ளார் என்கிற விமர்சனமும் தற்போது முன்வைக்கப்பட்டு வருவது, அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது,  “அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை நீக்கி விட்டு, அதிமுக தலைமை நிலைய செயலாளர்” என்று, தனக்குத் தானே  எடப்பாடி பழனிசாமி மாற்றிக்கொண்டு இருக்கிறார். இந்த விவகாரம் அதிமுகவில் பூதகாரமாக வெடித்து கிளம்பி உள்ள நிலையில் தான், சூட்டோடு சூடாக அடுத்த பிரச்சனையாக “ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயல்பாடுகள் யாவும், எம்.ஜி.ஆர் -ன் நோக்கத்திற்கு எதிராகவே இருப்பதாக” ஈபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள 378 பக்கங்களை கொண்ட மனுவில், ஈபிஎஸ் சார்பில் சரமாரியான குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக, “அதிமுக கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கு எதிராகவும், அதிமுக உருவாக்கப்பட்டதற்கு எதிராகவும்” ஓபிஎஸ் செயல்படுகிறார்” என்று, ஈபிஎஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

மேலும், “அதிமுக விவகாரங்களில் முடிவெடுக்கும் உரிமை பொதுக் குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், ஆனால் ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடுகள் யாவும் எம்.ஜி.ஆர் -ன் நோக்கத்திற்கு எதிராகவே தொடர்ந்து இருக்கிறது” என்றும், பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. 

அத்துடன், “எதிர் மனு தாரருக்கு வீட்டோ அதிகாரம் தருவது போல், கட்சி தலைமை பற்றி விவாதிக்க கூடாது என்ற ஆணை உள்ளது என்றும், அதிமுக வின் ஜனநாயக அமைப்பு முறையில் தலையிடுவது போல், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு உள்ளது” என்றும், அவர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

“உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை செயல்படுத்தினால், அதிமுக கட்சியின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என்றும், எம்.ஜி.ஆர் நோக்கத்திற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் உள்ளதாகவும்” உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் பகிரங்கமாக மீணடும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. 

இதனிடையே, “எம்.ஜி.ஆர் நோக்கத்திற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் செயல்பாடுவதாக” எடப்பாடி பழனிசாமி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ள சம்பவம், அதிமுகவில் பெரும் அதிர்ச்சியையும், மீண்டும் ஒரு புதிய குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.