“அதிருப்தி எம்.எல்.ஏக்கள் யாரும் மும்பைக்கு வர வேண்டாம்” என்று, பாஜக கோரிக்கை விடுத்து உள்ள நிலையில், “மீண்டும் சிவசேனா பவனில் அமர்ந்து, நான் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன்” என்று, உத்தவ் தாக்கரே சூளுரைத்து உள்ளார்.

மத்தியிலும் ஆளும் பாஜக, மகாராஷ்டிரா மாநிலத்தில் வழக்கமான தனது அரசியல் சித்து விளையாட்டை விளையாடிக்கொண்டு இருக்கிறது.

பாஜகவின் இந்த அரசியல் சித்து விளையாட்டால், அங்கு ஆளும் கட்சியாக இருந்த சிவசேனாவை சேர்ந்த 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி வகுத்து, சிவசேனா இரண்டாக பிளவு பட காரணமாக அமைந்து உள்ளனர்.

அதாவது, மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்தது.

இப்படியான சூழலுக்கு மத்தியில் தான், அவருடைய அமைச்சரவையில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனாவை சேர்ந்த 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திடீரென்று போர்க்கொடி தூக்கினர். ஆனால், இந்த போர்க்கொடிக்கு பின்னால், பாஜக இருந்தது, அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிந்தது. 

பின்னர், ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனாவை சேர்ந்த 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், தனி அணியாக முதலில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் தங்கினர். பிறகு, அங்கிருந்து அசாம் மாநிலம், கவுகாத்திக்கு சென்று அங்கு உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்கப்பட்டனர்.

சிவசேனாவை சேர்ந்த 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடந்த சில நாட்களாக குஜராத்தில் தங்கி இருந்த நிலையில், அம்மாநில சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும் படி ஆளுநர் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், “ஆளுநரின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி” அக்கட்சியினர் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், உச்ச நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்து விட்டது.

இதனால், வேறு வழியின்றி மகாராஷ்டிரா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே, தனது முதல்வர் பதவியை நேற்று இரவு ராஜினாமா செய்தார். 

இது தொடர்பாக உருக்கமாக பேசிய உத்தவ் தாக்கரே, 'காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு” தனது உருக்கமான உரையில் நன்றி தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “நான், எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக” அறிவித்தார்.

மேலும், தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த உத்தவ் தாக்கரே, “என்னை யாரும் அச்சுறுத்த முடியாது” என்று, குறிப்பிட்டார். 

குறிப்பாக, “சிவசேனா தொண்டர்களின் ரத்தம் சாலையில் வழிந்தோடுவதை தடுக்கவே நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றும், உத்தவ் தாக்கரே மிகவும் உருக்கமாக பேசினார். 

அத்துடன், “அரசின் முக்கிய கடமையாக நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, விவசாயிகளை கடன் இல்லாதவர்களாக ஆக்கியிருக்கிறேன் என்றும், அவுரங்காபாத், ஒஸ்மனாபாத் ஆகியவற்றின் பெயரை மாற்றி வரலாற்று முடிவை எடுத்திக்கிறோம் என்றும், எங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எதையும் எதிர்க்கவில்லை” என்றும், தனது உரையில் உருக்கமாக பேசி நன்றி தெரிவித்தார்.

முக்கியமாக, “நான் எதிர்பாராத விதத்தில் முதல்வர் பதவிக்கு வந்தேன் என்றும், அது பாணியில் வெளியே செல்கிறேன் என்றும், நான் நிரந்தரமாகப் போகப் போவதில்லை என்றும், இங்கேயே இருப்பேன்” என்றும் கூறினார்.

மிக முக்கியமாக, “நான் மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன் என்றும், நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன்” என்றும், உத்தவ் தாக்கரே சூளுரைத்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று இரவு நடைபெற்ற ஓட்டலில் பாஜக மாநில தலைவர் சந்திராகாந்த் பாட்டீல், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திரபட்நவிசுக்கு இனிப்பு ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இதனையடுத்து, “சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் யாரும் தற்போதைக்கு மும்பைக்கு வர வேண்டாம்” என்று, பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி, மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே, மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பாஜக தலைமையிலான புதிய கூட்டணி அரசு நாளைய தினம் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.