“அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?” என்கிற மிக கடுமையான போட்டியில் தீவிரமடைந்து, தற்போது உச்சக்கட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சி தற்போது நிறம் மாறி, குணம் மாறி திக்கு தெரியாமல் நிற்கிறதே” என்றே சொல்லத் தோன்றுகிறது.

அதாவது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவின் புதிய பொதுச் செயலாளர் ஆன சசிகலா, அடுத்த சில நாட்களில் சிறைக்குச் சென்றதால், அவர் அந்த கட்சியில் இருந்து முழுமையாக கழற்றிவிடப்பட்டார். இதனால், அதிமுகவில் பெரும் பிளவு ஏற்பட்டு, டிடிவி தினகரன் தலைமையில், அதிமுக இரண்டாக உடைந்து போனது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது “அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?” என்கிற மீண்டும் எழுந்துள்ள சர்ச்சையில் அதிமுகவில் தற்போது இரட்டை தலைமையாக உள்ள ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பெரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டு தற்போது, அந்த பனிபோர் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளன.

அதாவது, அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்களில் இருக்கக்கூடிய நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிட்டதட்ட 60 க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் தற்போது ஆதரவு தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே போல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும் தகவல் தற்போது வெளியாகி, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இவற்றுடன், “நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க ஆதரவு தெரிவித்ததாகவும்” தற்போது அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சூழலில் தான், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தீர்மான குழு கூட்டம், முன்னதாக நிறைவடைந்து உள்ளன. இந்த நிலையில் தான், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சி.வி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சந்தித்து மீண்டும் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தீர்மான குழு கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த தவறும் இல்லை என்றும், பொது வெளியில் பேட்டி அளித்தது சிதம்பர ரகசியம் ஒன்றும் கிடையாது என்றும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்ததை மட்டுமே பேட்டியில் கூறி இருந்தேன்” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “ஒற்றைத் தலைமையா ? இரட்டைத் தலைமையா? என்பதை கட்சி தான் முடிவெடுக்கும் என்றும், என் மீது நடவடிக்கை எடுப்பதாக பூச்சாண்டி காட்டுவதற்கெல்லாம் நான் கவலைப்பட போவதில்லை” என்றும், அவர் துணிச்சலாகவே பதில் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, “அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால், நிச்சயம் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படலாம்” என்று, தற்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக, தனது ஆதரவாளர்களுக்கு 11 அம்சங்களை உள்ளடக்கி கடிதம் ஒன்றையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுதி உள்ளது. 

அதில், “ஒற்றைத் தலைமைக்காக கட்சி விதிகள் திருத்தப்பட்டால், சட்டப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனவும், தற்போதுள்ள இரட்டை தலைமை பதவிக்காலம் முடிவதற்குள் மாற்றம் செய்தால், தேர்தல் ஆணையத்திலும் பிரச்னையை சந்திக்க நேரிடும் என்றும், ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம்” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.