அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக வெடித்த உட்கட்சிப்பூசல் காரணமாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் அடிதடி, ரகளை, மோதல் என இபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு, ரத்த காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?” என்கிற பேச்சுக்கள் தான், கடந்த ஒரு வார காலமாக, அதிமுகவின் கடைசி தொண்டன் வரை பேசும் பேச்சாக தற்போது மாறி இருக்கிறது.

இதனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி அதன் மூலமாக மறைமுக யுத்தம் ஒன்றையும் நடத்தி வந்தனர். இது, பனி போராகவும் மாறி, அக்கட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன், “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை பற்றி பேட்டி கொடுத்ததால் தான், ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது” என்றும், ஓபிஎஸ் அனைவரும் முன்பும் ஓபனாகவே போட்டு உடைத்தார்.

இதனை ஓபிஎஸ் சொன்னதுமே, “அதிமுகவில் குழப்பத்திற்கு காரணமான ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று, செய்தியாளர்கள் அடுத்த கேள்வியை எழுப்பிய நிலையில், சற்று நிதானமாக பதில் அளித்த ஓபிஎஸ், “பொருத்திருந்து பாருங்கள் தெரியும்” என்று, சூசகமாக பதில் அளித்தார்.

இதனால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும், ஜெயக்குமார் மீது கடும் கோபம் அடைந்தனர்.

அதே நேரத்தில், ஜெயக்குமார் ஈபிஎஸ் ஆதரவாளர் என்பதையும், ஓபிஎஸ் மறைமுகமாகவே இதன் மூலம் சக அதிமுக தொண்டர்களுக்கு தெரியப்படுத்தினார். இதன் மூலமாக, ஓபிஎஸ் ஆதரவு நிலைபாடு கொண்ட அதிமுக தொண்டர்கள் ஜெயக்குமார் மீது எதிர் விரோதம் பாராட்டத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாகவே, இன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒரு சம்பவமும் நடந்தது.

அதாவது, அதிமுக பொதுக் குழு தீர்மானக்குழுவுடன் ஆலோசனை நடத்துவதற்காக, ஓ.பன்னீர் செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காலையில் வருகை தந்தார்.

அதே போல், அடுத்த சில மணி நேரத்தில், அத்துடன், எடப்பாடி ஆதரவாளரான செல்லூர் ராஜு வந்த போது, ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அதன் தொடர்ச்சியாக, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருகை தந்தார். அப்போதும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அவரதுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பினர். இதனால், அதிமுக அலுவலகத்தில் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

குறிப்பாக, ஜெயக்குமார் உடன் வந்த ஈபிஎஸ் ஆதரவாளர் பெரம்பூர் அதிமுக நிர்வாகி மாரிமுத்து என்பவர் மீது,  ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திடீரென்று தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அந்த கூட்டத்தில் சிக்கித் தவித்த மாரிமுத்துவுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டு, அவர் அணிந்திருந்த சட்டையானது ரத்த கறையாக மாறியது.

இதனால், சட்டையில் ரத்த காயம் கறையுடன் மாரிமுத்து வெளியே வந்த நிலையில், “ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தன்னை அடித்து வெளியேற்றிவிட்டதாக” அவர் பேட்டி அளித்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும், அதிமுக அலுவலகத்தில் வெளியே சக அதிமுக தொண்டர்கள் மோதிக் கொள்ளும் அதே நேரத்தில், அலுவலகத்தின் உள்ளே ஓ. பன்னீர் செல்வம் தீர்மானக்குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக வில் 5 வது நாளாக ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது தாக்குதல் நடந்துள்ளது, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.