அ.தி.மு.க சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உருந்தூர்பேட்டையில் மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்க நாள் விழாவின் பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , ‘’ கீழடியில் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காக்கும் வகையில் 12 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைத்தது அதிமுக அரசு. தமிழ் மொழி மற்றும் தமிழகத்திற்கோ எதாவது ஒரு பாதிப்பு வரும் போது எல்லாம் மக்களுக்கும் மண்ணுக்கும் துணையாக இருப்பது அதிமுக அரசு. 


இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்டது ஆட்சி என்றால், தி.மு.க ஆட்சி தான். இப்போது கிராம சபை கூட்டம் நடத்தி வரும் மு.க ஸ்டாலின்,  2019 -ம் ஆண்டில் நடத்திய கிராமசபை கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை என்ன செய்தார்? அதை எங்களிடம் கொடுத்திருந்தால், மக்களின் குறைகளை தீர்த்து வைத்திருப்பேன். திமுகவின் மூத்த அமைச்சர்களின் வழக்கை விரைந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 இந்தியாவிலேயே விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வாங்கி கொடுத்தது அதிமுக அரசு தான். இன்று தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல் இடத்தில் இருக்கிறது. 


முன்னர் ஏமாந்தது போல் மீண்டும் ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை. அதனால் தான் 10 ஆண்டுகள் திமுகவை மக்கள் நிராகரித்தார்கள். தமிழகத்தை பொறுத்த வரை நாடாளுமன்றத் தேர்தல் வேறு சட்டமன்றத் தேர்தல் வேறு.  மக்கள் தெளிவாக பிரித்து பார்த்து வாக்களிக்கிறார்கள். நாங்கள் செய்ய நினைத்த  திட்டங்கள் குறித்த தகவல்கள் கசிந்து விட்டது. அதை தான் காப்பியடித்து ஸ்டாலின் மக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகிறார். திமுக ஒரு ரவுடி கட்சி. அதை மக்கள் புறகணிக்க வேண்டும் “ என்றார்.