திரையுலகில் மக்களின் மனம் கவர்ந்த நடிகராக திகழ்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. திரையில் மட்டும் எதார்த்தமாக இல்லாமல் நிஜ வாழ்விலும் இயல்பாக இருப்பவர் சேது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் புதிதாக அமைந்துள்ள சென்னை கார்ஸ் கேர் எனும் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஜய்சேதுபதி ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி நிறுவனத்தை திறந்து வைத்தார்.

நடிகர் விஜய்சேதுபதி வருவதை அறிந்து அப்பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார் சர்வீஸ் சென்டரை திறந்து வைத்த விஜய்சேதுபதி வெளியே சென்று காரில் ஏறமுடியாமல் மக்கள் வெள்ளத்துக்கு இடையே மிதந்தார். அவருடன் முட்டி மோதிக் கொண்டு பலர் செல்ஃபி எடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய்சேதுபதியிடம் மாஸ்டருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார், மக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். இது நிறைய பேருக்கு வாழ்க்கையை , நம்பிக்கையை தொடங்கி வைத்திருக்கிறது. படம் முழுக்க முழுக்க இப்படி வந்திருக்கிறது என்றால் விஜய் தான் அதற்கு முக்கிய காரணம் என்றார்.

அடுத்ததாக 800 படத்தைப் பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் முன்வைக்க, 800 பட பிரச்னை முடிந்துவிட்டது. அதை மீண்டும் கிளப்பாதீர்கள் என்று வெளிப்படையாக கூறினார் விஜய்சேதுபதி. மாஸ்டர் என்றாலே விஜய்சேதுபதி படம் என்று ஒரு சிலர் கூறுகிறார்களே என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொன்ன விஜய் சேதுபதி, இந்தக் கேள்வியே அவசியமில்லாதது. விஜய்யால் மட்டும் தான் அந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது என்றார். 

மேலும் தமிழக தேர்தல் குறித்து பேசிய அவர், ஒரு வாக்காளனாக மட்டுமே தான் தேர்தலை பார்ப்பதாக தெரிவித்தார். மாஸ்டர் படம் குறித்தும், செய்தியாளர்கள் முன்பு எந்த ஒரு தயக்கமும் இன்றி வெளிப்படையாக பேசிய விஜய் சேதுபதியை பாராட்டி வருகின்றனர் திரை ரசிகர்கள். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சேது. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

விஜய் சேதுபதி கைவசம் துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், கடைசி விவசாயி போன்ற படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.