1959-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் வீரபாண்டிய கட்ட பொம்மன். பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் என பலரும் நடித்திருந்தனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை பேசும் படமாக இந்த படம் இருந்தது. 

இந்தப் படத்தில் இடம்பெற்ற எதற்கு கட்ட வேண்டும் கிஸ்தி என்ற டயலாக் பெரும் பிரபலமானது. இப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்திருந்தவர் பழம் பெரும் நடிகர் சி.ஆர். பார்த்திபன். ஹீரோவுக்கு நிகரான இந்த வில்லன் பாத்திரம் அந்த காலத்திலே பேசப்பட்டதாம். ஆங்கிலேயர் போல் ஒரு இந்திய நடிகர் நடிப்பதென்பது அந்த காலகட்டத்தில் ஒரு பெரிய விஷயமாம். 

வேலூரை சேர்ந்த, சி.ஆர்.பார்த்திபன், பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து, எதேர்ச்சியாக கிடைத்தது தான் ஹிந்தி பட சினிமா வாய்ப்பு. ஹிந்தியில் தான் அவர் அறிமுகமும் ஆனார். இதன் பின்னரே, தமிழில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்து திரை ரசிகர்களை ஈர்த்தார். 

கிட்டத்தட்ட 120 படங்களில் நடித்திருக்கிறார். ராஜாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் என ஐந்து முதல்வர்களுடன் தொடர்பில் இருந்த நடிகராகத் திகழ்ந்தார். கோழி கூவுது முதலான படங்களில் நடித்தார். அண்ணே அண்ணே பாடலில் இவர் நடித்தது இன்னும் இவரை பிரபலப்படுத்தியது.

இந்நிலையில் பழம் பெரும் நடிகர் சிஆர் பார்த்திபன் நேற்று இரவு காலமானார். 90 வயதான சிஆர் பார்த்திபன் வயது முதிர்வு பிரச்சனைகளால் உயிர் நீத்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரித்திரத்திலும் ரசிக மனங்களிலும் ஜாக்ஸன் துரை எப்போதும் இருப்பார்.