தமிழ் திரை உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மகான் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை அடுத்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் #சீயான்61 திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா அவர்கள் தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்த ருசிகர தகவல்களை தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் இந்த திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராக உள்ளதாகவும், 3D தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பீரியட் படமாக தயாராகும் இப்படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்றும் வருகிற ஜூலை 15ஆம் தேதி இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 

மேலும் தங்களது தயாரிப்பில் உருவாகும் அடுத்தடுத்த படங்கள் குறித்து பல ருசிகர தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா அவர்களின் அந்த பேட்டி இதோ…