தமிழ் திரை உலகின் முன்னணி கமர்சியல் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் யானை. அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் யானை படத்தில் பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு, ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ட்ரம்ஸ்டிக்ஸ் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் யானை இப்படத்திற்கு GV.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். முன்னதாக யானை திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 3ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

தற்சமயம் பாக்ஸ் ஆபீசில் 300 கோடி வசூல் சாதனை செய்துள்ள விக்ரம் திரைப்படம் மேலும் பல வசூல் சாதனைகளை செய்யவேண்டும் என்ற காரணத்தினால் யானை படக்குழுவினர் யானை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 1ஆம் தேதிக்கு மாற்றி உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்தும் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி குறித்தும் உலக நாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்த யானை படக்குழுவினரின் புகைப்படம் தற்போது வெளியானது. அந்த புகைப்படம் இதோ…