ரசிகர்களின் ரசனையையும் என்றும் மதிக்கும் கலைஞானி கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம தேதி வெளியாகி தற்போது பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. உலகநாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜின் FAN BOY சம்பவமாக வெளிவந்திருக்கும் விக்ரம் திரைபடத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஃபகத் பாசில், நரேன், செம்பன் வினோத், ஜாஃபர், காளிதாஸ் ஜெயராம், சந்தானபாரதி, குமரவேல் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள விக்ரம் படத்தில் சர்ப்ரைஸ் கேரக்டராக ஜொலித்த நடிகை வசந்தியின் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் படம் முடிந்த பிறகும் அந்த கதாபாத்திரத்தை நம் மனதில் நிறுத்தியது.

க்ளைமாக்ஸ் காட்சியில் வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும் கூட நடிகர் சூர்யாவின் மிரட்டலான ரோலக்ஸ் கதாப்பாத்திரமும் நடிப்பும் திரையரங்கங்கள் அதிர வைத்தது. கிரிஷ் கங்காதரனின் நேர்தையான ஒளிப்பதிவும், ஃபிலோமின் ராஜின் கச்சிதமான படத்தொகுப்பும், அன்பறிவு மாஸ்டர்களின் அட்டகாசமான சண்டை காட்சிகளும் விக்ரம் படத்திற்கு வலு சேர்த்தது.

குறிப்பாக லோகேஷ் கனகராஜின் விறுவிறுப்பான திரைக்கதையும் அனிருத்தின் அதிரடியான பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் திரையரங்கில் திரைப்படத்தை பார்க்க தரமான அனுபவத்தை அளித்தது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ரிப்பீட் மோடில் ரசிகர்கள் ரசித்து வருவதால் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.