“அடுத்த 20 நாட்களில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று, பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மத்திய அரசானது, பெட்ரோல் - டீசல் மீதான வரியை குறைத்து உள்ள நிலையில், தமிழக அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைக்கவில்லை என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக சார்பில் இன்று பேரணி நடத்தப்பட்டது. 

அதன் படியான இந்த போராட்டமானது, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து புறப்பட்டு, தலைமை செயலகத்தை நோக்கி நடைபெற்றது.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், ருக்மணி லட்சுமிபதி சாலையில் தொண்டர்களுடன் நடந்து சென்ற அண்ணாமலை, திடீரென அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி அங்கிருந்து சென்றார். இதனால், அங்கு திரண்டிருந்த மற்ற பாஜகவினரும் ஆங்காங்கே அப்படியே கலைந்து சென்றனர்.

முன்னதாக இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட போது பேசிய அண்ணாமலை, “தமிழக அரசு திராவிட மாடல் சினிமா அரசு” என்று, விமர்சித்தார்.

“தேர்தல் வாக்குறுதியில் கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு, பெட்ரோல் டீசல் விலை குறைக்காது ஏன்?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

“மத்திய அரசு கடந்த 6 மாதங்களில்  2  முறை பெட்ரோல் - டீசல் விலை குறைத்து உள்ளது என்றும், ஆனால் இங்கே தமிழகத்தில் உள்ள சினிமா அரசு வாய் சவடால் அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க மறுக்கிறது” என்றும், குற்றம்சாட்டினார்.

“ ஒவ்வொரு ஊராக சென்று அமைச்சர்கள் பட்டத்து இளவரசரை அமைச்சராக கூட்டம் போட்டு கொண்டு இருக்கின்றனர் என்றும், தேர்தல் அறிக்கையை எழுதிய டி.ஆர்.பாலுவை முதல்வராக்குங்கள், நாங்கள் அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்றும், அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

“பாஜக போராட்டத்துக்கு பயந்து முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கு சென்றுவிட்டார் என்றும், இந்த விடியா அரசின் நாட்கள் தற்போது எண்ணப்பட்டு கொண்டுதான் இருக்கிறது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும், “இன்னும் 750 நாட்கள் தான் இருக்கிறது என்றும், தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி உள்ளது என்றும், இன்னும் 2 தினங்களில் அடுத்த கட்ட ஊழல் பட்டியலை வெளியிட உள்ளோம்” என்றும், அவர் மிரட்டினார்.

அத்துடன், “பிரதமரை அமர வைத்து கொண்டு என்ன பேசினாலும், அதை கேட்பதற்கு இங்கு யாரும் தயாராக இல்லை என்றும், கச்சத்தீவை கனவில் கூட திமுகவால் மீட்க முடியாது என்றும், அதை பாஜக விடம் விட்டு விடுங்கள், நாங்கள் பார்த்து கொள்கிறோம்” என்றும், அவர் சூளுரைத்தார்.

“பிரதமர் முன் முதல்வர் கூறிய அனைத்து புள்ளி விவரங்களும் தவறானது என்றும், நிதி அமைச்சர் எங்கு பரீட்சை எழுதினாலும், பெயில் ஆகிறவர் என்றும், அவரின் தாத்தாவின் பெயரை கெடுத்து வருகிறார்” என்றும், அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.

குறிப்பாக, மக்களை வேறு மொழி படிக்க அனுமதியுங்கள் என்றும், அது தான் நமது புதிய கல்வி கொள்கை என்றும், இதனை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், எங்களுடைய கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால், அடுத்த 20 நாட்களில் மாவட்டம் தோறும் உண்ணாவிரதம் இருப்போம்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.

முக்கியமாக, அதன் தொடர்ச்சியாக, 30 நாள்களில் திருச்சியை நோக்கி மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றும், இதில், 10 லட்சத்திற்கு மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொள்வார்கள்” என்றும், அண்ணாமலை பகிரங்கமாக தமிழக அரசை மிரட்டி உள்ளார்.