சீனாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், “கொரோனா மூன்றாவது அலை பரவாத வண்ணம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி வழி முறைகளை கடுமையாக அமல்படுத்துதல் வேண்டும்” என்று, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இதனால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், கொரோனா பரவல் இன்னும் முழுமையான கட்டுக்குள் வராமல் பரவிக்கொண்டுதான் வருகிறது.

அதாவது, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.4 கோடியைத் தாண்டி உள்ள நிலையில், இதுவரை கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 49.5 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், சற்று குறைந்து காணப்பட்ட கொரோனா என்னும் கொடிய நோய் தற்போது அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சீனாவில் புதிதாக கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளதால், 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்ஜோ நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு, அவசர சூழல் தவிர்த்து பொது மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

முக்கியமாக, சீனாவில் 29 புதிய உள்நாட்டு நோய்த்தொற்றுகள் பதிவாகியதால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கி உள்ள இந்த சூழலில் தான், இந்தியாவில் பண்டிகை காலங்கள் தொடங்க உள்ளதால், பொது மக்கள் அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் விழாக்களை கொண்டாடும் வகையில் வழி முறைகளை இன்னும் கடுமையாக அமல்படுத்த வேண்டும்” என்று, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றுபரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது என்றும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை விடா முயற்சியுடன் பின்பற்றாததன் காரணமாகவே தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது” என்றும், சுட்டிக்காட் உள்ளது.

இதனால், “இந்தியாவில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று, மத்திய அரசு கேட்டுகொண்டு உள்ளது. 

“பண்டிகைகளை எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடும் வகையில், வழி முறைகளை கடுமையாக அமல்படுத்துதல் வேண்டும்” என்றும், வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும், “பண்டிகைகளின் போது எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கு தேவையான வழி காட்டுதல்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் முன்கூட்டியே போதுமான அளவில் வழங்க வேண்டும் என்றும், முன்கூட்டிய அனுமதி வழங்கப்பட்ட மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுடன் கூடிய கூட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்” என்றும், மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. 

“கொரோனா தடுப்பு விதிகள் மீறப்படும் போது, அபராதம் விதிப்பது போன்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றும். மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.