தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் S.J.சூர்யா சிறந்த நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், கதையின் முக்கியமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து ரசிகர்களுக்கு பல வெரைட்டிகளை கொடுத்து வருகிறார்.

அந்தவகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும்  டான் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள S.J.சூர்யா, இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் கடமையை செய் படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்திருக்கும் மாநாடு திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் S.J.சூர்யா நடித்துள்ளார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ள மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக நவம்பர் 4-ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட மாநாடு திரைப்படம் நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது மாநாடு படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதன் டப்பிங் பணிகளை S.J.சூர்யா நிறைவு செய்துள்ளார். தொடர்ந்து இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கிட்டத்தட்ட 8 நாட்களில் முடிக்க வேண்டிய மாநாடு படத்தின் எனது டப்பிங் பணிகளை 5 நாடகளில் முடித்துள்ளேன்... எனது நாடி, நரம்பு,கழுத்து, தண்டுவடம் & தொண்டை அனைத்தும் என்னிடம் 10 நாட்கள் ஓய்வு அளிக்கும்படி கெஞ்சுகிறது. (HEAVY WORK வலி பின்னுது) ஆனால், பணிகளை முடித்து படத்தை பார்த்த பின் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்... தீபாவளி நவம்பர் 25 தான்டா!!” என தெரிவித்துள்ளார். இயக்குனர் S.J.சூர்யாவின் இந்த பதிவு மாநாடு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது.