ஸ்மார்ட்போன் மீதான மோகத்தால் 17வயது கணவன், தன்னுடைய 26 வயது மனைவியை விற்று ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டம்  பெல்படா பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

இந்த சூழலில் தான் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சூழலில், பலரும் வாழ்வாதாரம் இன்றி மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அப்படியான ஒரு சூழலில் தான், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கும், பள்ளியில் படித்த வந்த குறிப்பிட்ட அந்த 17 வயதான சிறுவனுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்திருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு, குடும்ப வறுமை காணமாக, 17வயது கணவனும், அவருடைய 26 வயது மனைவியும் அந்த பகுதியில் கூலித் தொழிலாளிகளாக இருவரும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு செங்கல் சூளை ஒன்றுக்கு வேலைக்கு சென்று உள்ளனர்.

கணவன் - மனைவி இருவரும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த போது, ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர், அந்த 17 வயதான சிறுவனுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். 

அவரிடம், அந்த 17 வயதான சிறுவன் சில நாட்களாக பழகி வந்த நிலையில், அவர் வைத்திருக்கும் செல்போன் உள்ளிட்ட பல பொருட்கள் மீது அவருக்கு ஆசை வந்துள்ளது.

இதனால், அந்த 17 வயது கணவன், தன்னுடைய 26 வயதான மனைவியை அவரிடம் தனது மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி விற்றிருக்கிறார். 

தன் மனைவியை விற்ற அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு, தினமும் நன்றாக சாப்பிட்டு வந்த அவர், தான் ரொம்ப நாட்களாக ஆசைப்பட்ட மாதிரியே ஒரு ஸ்மார்ட்போனும் வாங்கி இருக்கிறார். 

அத்துடன், செல்போன் வாங்கியது போக மிச்ச பணத்தை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு அந்த 17 வயது கணவன் தனியாக திரும்பி வந்திருக்கிறார்.

“கணவனும் மனைவியுமாக சென்றவர்கள், தனியாக வந்து நிற்கிறாயே?” என்று, இரு வீட்டாரும் மற்றும் ஊராரும் கேட்டுருக்கிறார்கள். 

அதற்கு அவர், “என் மனைவி என்னை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்” என்று, கவலையுடன் கூறியிருக்கிறார். ஆனாலும், பெண்ணின் குடும்பத்தாருக்கு அந்த சிறுவன் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல், அங்குள்ள பலங்கிர் மாவட்டம் பெல்படா போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர்.  

இந்த புகாரின் பேரில் அந்த சிறுவனை அழைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், “என் மனைவியை வேறு ஒருவருக்கு விற்று விட்டு செல்போன் வாங்கிவிட்டு வந்ததாக” கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஒடிசா போலீசார் அந்த பெண்ணை மீட்பதற்காக ராஜஸ்தான் பாரன் மாவட்டத்திற்கு சென்றிருக்கின்றனர்.  

பாரன் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்குச் சென்று அப்பெண்ணை மீட்க சென்ற போது,  உள்ளூர் மக்கள் போலீசாரை சுற்றி வளைத்து கொண்டு மிரட்டி உள்ளதாகவும், குறிப்பாக “பெண்ணிற்காக அந்த முதியவர் 1.8 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார் என்றும், பெண்ணை அழைத்து போவதாக இருந்தால், அந்த பணத்தை கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறி போலீசாரிடம் அந்த பகுதி மக்கள் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

எனினும், அந்த ஊர் மக்களை சமாதானம் பேசிய போலீசார், அந்த பெண்ணை மீட்டு ஒடிசாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இதனையடுத்து, அந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக, 17 வயதான கணவன் ஒருவன் தனது மனைவியையே விற்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.