தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளத்தையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் சிறந்த நடிகரான கார்த்தி அடுத்ததாக,இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில், இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன்-ல் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனையடுத்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் படத்திலும் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் கார்த்தி, அடுத்ததாக கொம்பன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில், நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படமான விருமன் திரைப்படத்தில் நடிக்கிறார். 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க,SK.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள விருமன் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் மதுரையில் நடைபெறும் விருமன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கார்த்தி, “14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மதுரையில் விருமன் படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன்... இன்றும் மக்கள் பருத்திவீரன் பற்றி பேசுவதை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... மக்களின் அன்பு என்றும் மாறாததாக இருக்கிறது” என தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். விருமன் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.