உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி. இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கினர்.

முன்னதாக முதல் வாரத்திலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற, அடுத்த வாரத்தில் நாடியா எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த வாரத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புப்படியே அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அபிஷேக் ராஜா முதல் முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டார். அதில் “பிக்பாஸ் ஒரு விளையாட்டு... இதன் விதிகளுக்கு உட்பட்டே விளையாடினேன்... எனது சக போட்டியாளர்கள் அனைவருக்குள்ளும் போட்டி மனப்பான்மையை என்னால் ஏற்படுத்த முடிந்தது, ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவருடனும் எனக்கு புரிதல் இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் நான் இருக்க எண்ணியே ரிஸ்க் எடுத்து விளையாடினேன், ஆனால் வெளியேறினேன், இருந்தாலும் நான் நானாக இருந்ததில் திருப்தி அடைகிறேன். உண்மையாக இருப்பது தான் எனது பிரச்சனையாக இருந்தால், நான் அப்படிதான் என் நிகழ்ச்சியையும் என் வாழ்க்கையும் நடத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுதும், எலிமினேட் செய்யப்பட்ட பிறகும் அபிஷேக் ராஜா மீது பலவிதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அபிஷேக் ராஜா இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.