“கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்பு உள்ளதால், மக்களே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று, நிதி ஆயோக் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலையானது, வேகம் குறைந்து இயல்பு நிலைக்கு இந்தியா திரும்பிக்கொண்டு இருக்கிறது.
இதனால், தினசரி கொரோனா பாதிப்பு என்பது இந்தியாவில் சற்று குறைந்து தான் பதிவாகி வருகிறது.

அத்துடன், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,596 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 

அவற்றுடன், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 19,582 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 166 பேர் கொரோனா தொற்றுால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கின்றனர். 

அதே நேரத்தில், இந்தியாவில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 81 ஆயிரத்து 315 ஆக அதிகரித்து இருக்கிறது.

அத்துடன், இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்வி ஆகிய 3 விதமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 

12 வயது முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு செலுத்துவதற்காக சைகோவ்-டி என்கிற பெயரில் ஊசியின்றி செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்தத் தடுப்பூசியை சிறார்களுக்கு அவசர காலத்தில் செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியையும் சிறார்களுக்கு செலுத்துவதற்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது பரிந்துரை செய்து இருக்கிறது.

இந்நிலையில், இது தொடர்பாக நிதி ஆயோக் சுகாதாரம் உறுப்பினரும், கொரோனா தடுப்புப் பிரிவின் தலைவருமான வி.கே.பால் கூறும்போது, “ஏற்கெனவே கோவேக்சின் தடுப்பூசி பெரியவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்றும், சிறாா்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என்றால், அதன் உற்பத்தியையும் விநியோகத்தையும் அதிகரிக்க வேண்டும்” என்றும், குறிப்பிட்டார்.

“கொரோனா நோய்த் தொற்று அதிகமாக சிறார்களைத் தாக்குகிறது என்றும், அதே சமயம் சிறார்களிடம் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்படுவதில்லை என்றும், அவர்களிடம் இருந்து பிறருக்கு நோய்த்தொற்று எளிதில் பரவுகிறது” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார்.

“சிறார்களுக்கான தடுப்பூசிகள் போதிய அளவில் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கலாம்” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.

குறிப்பாக, “இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் ஓய்ந்து உள்ளது என்றும், கொரோனா அழிந்துவிட்டது என்று கூறி விட முடியாது” என்றும், அவர் தெளிவுப்பட கூறினார். 

அதற்கு காரணம், “பல நாடுகளில் கொரோனா தொற்று பல அலைகளாகத் தொடர்ந்து தாக்கி வருவதை நம்மாள் காண முடிகிறது” என்பதையும், அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்தியா தற்போது இக்கட்டான சூழலைக் கடந்து வருகிறது என்றும், அடுத்து வரும் பண்டிகைக் காலத்தில் மக்கள் கூடும் போது, கொரோனா பெருந்தொற்று இன்னும் வேகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் பொது மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.