வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் கொரோனா 3 வது அலை தொடங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தோற்று சற்று அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று தோன்றியதாக கூறப்படும் சீனாவில், புதிய வகையிலான கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

அத்துடன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று சற்று அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே போல், பண்டிகை காலத்திற்குப் பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இதனால், “பொது மக்கள் வைரஸ் நோய்த் தொற்று நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்” என்றும், தமிழக  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

“தமிழகம் முழுவதும் 1.4 கோடி முதியவர்கள் உள்ளதாகவுமு், இதில் 47 லட்சம் பேர் தான் முதல் தவணை  தடுப்பூசியும், 27 சதவீதம் பேர் தான் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போட்டுக்கொண்டு உள்ளனர் என்றும், இதனால் முதியவர்கள் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

மேலும், “கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது, நாமக்கல் மாவட்டத்தில் தோற்று சற்று அதிகரித்து உள்ளது என்றும், அங்கு  கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்பாக, “தமிழகத்தில் இது வரை கொரோனா 3 வது அலைக்கான அறிகுறிகள் இல்லை என்றாலும்,  3 வது அலை வராது என்று கூற இயலாது” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார். 

முக்கியமாக, “வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் சிலவற்றில் கொரோனா 3 வது அலை ஏற்பட்டுள்ளது என்றும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது” என்றும் அவர் கூறினார். 

“மழை காலங்களில் பரவும் நோய்களில் இருந்தும் மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்” என்றும், அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழகம் முழுவதும் இன்று 6 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அத்துடன், இன்றைய தினம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்கள் இன்று நடைபெற்று வருவதால், பொது மக்கள் பலரும் சென்று ஊசிப்போட்டுக்கொண்டு வருகின்றனர்.

அதே போல், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 666 பேர் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.