இந்திய சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இந்தூரி தனது விப்ரி மோட்ஷன் பிக்சர்ஸ் சார்பில் வரிசையாக பயோபிக் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் முதலில் தெலுங்கு சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாக திகழ்ந்த என்.டி.ராமராவ் அவர்களின் பயோபிக் திரைப்படத்தை தயாரித்தார்.

என்.டி.ராமராவ் அவர்களின் மகனும் முன்னணி தெலுங்கு நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த NTR திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் சிறந்த நடிகையுமான மறைந்த புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக உருவான தலைவி படத்தையும் விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரித்தார்.

தொடர்ந்து 1983-ல் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக் கோப்பையை வென்றெடுத்த சாதனை நிகழ்வை மையப்படுத்தி பாலிவுட்டில் தயாரான 83 திரைப்படத்தையும் விப்ரி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரித்தார். 83 திரைப்படம் இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் வெளியாகி மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

இந்த வரிசையில் அடுத்ததாக ஐபிஎல்-ன் நிறுவனரான லலித் மோடியை மையப்படுத்திய திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக விஷ்ணுவர்தன் இந்தூரி அறிவித்துள்ளார். எழுத்தாளர் போரியா மஜும்டர் எழுதிய MAVERICK COMMISSIONER: The IPL-Lalit modi saga எனும் புத்தகத்தை தழுவி ஐபிஎல் மற்றும் லலித் மோடியை மையப்படுத்திய திரைப்படம் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்-நடிகைகள் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.