ராணுவ வீரர்களின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகளை அடைத்து வியாபாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

bipin rawat

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர் கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். 

தொடர்ந்து  அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.  இந்நிலையில் மீட்பு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தரைப்படை ராணுவ தளபதி நரவனே, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தினார்.

வெலிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்வு முடிந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் வழியெங்கும் பொதுமக்கள் சாலைகளின் இரு ஓரமும் நின்று தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர். பின்னர் சூலூர் பேட்டை விமானப்படைத் தளத்தில் இருந்து 13 ராணுவ வீரர்களின் உடல்களும் டெல்லிக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி , பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல் தெரிவித்தார். 

இந்நிலையில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 2,500 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்தும் இன்று காலையில் மூடப்பட்டிருந்தன. இன்று காலை மார்க்கெட்டில் உள்ள அனைத்துக் கடைகளுமே அடைக்கப்பட்டிருந்தன. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மார்க்கெட் பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. 
அதனைத்தொடர்ந்து  எல்லா கடைகளும் இன்று அடைக்கப்பட்டதால் காலையில் இருந்தே இந்தப் பகுதியில் எந்தவொரு வாகனத்தையோ, மக்கள் நடமாட்டத்தையோ காண முடியவில்லை. குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுப்புறப் பகுதிகளிலும் செயல்படக்கூடிய டீக்கடைகள், உணவகங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், எலக்ட்ரிக் கடைகள், செல்போன் கடைகள்  என அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

மேலும் குன்னூர் மற்றும் கோத்தகிரி மார்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகைக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், பந்தலூர், கூடலூர் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்குத் தங்கள் துக்கத்தைக் கடைப்பிடித்தனர்.

அதேபோல் இன்று ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்தனர். இதனால் தனியார் பேருந்துகள் இன்று ஓடவில்லை. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், 4 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா வாகனங்களும் இயங்கவில்லை. கூடலூர் மற்றும் பந்தலூர் பொதுமக்கள், ஓட்டுநர்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் திரண்டு கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக மவுன ஊர்வலமாகச் சென்று ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.