குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின் போது பிபின் ராவத்தை உயிருடன் பார்த்ததாக ஒருவர் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு நேற்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம் சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது. இதனால் ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து  விபத்துக்குள்ளானது. 

உலகையே உலுக்கிய இந்த கோர விபத்தில் இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 

ஹெலிகாப்டரில் பயணம் செய்த குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் தப்பினார்.  அவரும் 80 சதவீத தீக்காயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  இந்நிலையில் இந்த விபத்தை நேரில் கண்ட சிவக்குமார் என்பவர், விபத்து குறித்தும் பிபின் ராவத் குறித்தும் தெரிவித்துள்ளார்.

helicopter crash eyewitness

அவர் கூறியதாவது:

"நான் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் எனது சகோதரரை பார்க்க வந்தேன். அப்போது பெரிய சத்தத்துடன் ஹெலிகாப்டர் ஒன்று இரண்டாக பிளந்து தீப்பிடித்து எரிவதை கண்டேன். உடனடியாக நானும், அருகில் இருந்தவர்களும் ஹெலிகாப்டர் விழுந்த இடத்திற்கு விரைந்தோம். நான் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தேன்.

விபத்தின் தாக்கத்தால் ஹெலிகாப்டரில் இருந்து தூக்கி எறியப்பட்ட மூன்று பேரை நான் பார்த்தேன். அவர்கள் காயமடைந்து இருந்தனர், ஆனால் உயிருடன் இருந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரை நாங்கள் வெளியே எடுத்தோம். அப்போது அவர் தண்ணீர் கேட்டார். பின்னர் அவரை மீட்புக்குழுவினர் அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் கழித்து தான் அவர் முப்படைகளின் தலைமை தளபதி  பிபின் ராவத் என்று ஒருவர் எனக்குத் தெரிவித்தார். 

இந்த மனிதர் நாட்டுக்காக பல சேவைகள் செய்துள்ளார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு என்னால் தண்ணீர் கூட கொடுக்க முடியாத நிலையில் தான் இருந்ததால், என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை" என்று கண்ணீர் மல்க சிவக்குமார் கூறினார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முப்பைட தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.