“மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்திலோ அல்லது அந்தந்த மாநில மொழிகளிலோ வைப்பதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது?” என்று, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி கனிமொழி, “நான் தமிழில் பேசுகிறேன் உங்களுக்கு புரியுதானு சொல்லுங்கள்” இந்தி பேசும் எம்.பி.க்களை பார்த்து கேட்டது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

“இந்தியா பல மொழிகள், பல இனங்கள் கொண்ட ஒரே தேசம். இங்கு, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழி சார்ந்தே அனைத்து அரசு முறை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் தான், பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா முழுவதும் பன்முகங்கள் கொண்ட மாநில மொழிகளுக்கு எதிராகச் செயல்படுவதுடன், இந்திய மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பல மாநிலத்திலும் சட்டத்திற்குப் புறம்பாக வேண்டும் என்றே திணித்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் பாஜக மீது எதிர்க் கருத்துக்கள் வீசப்படுகிறது.

முக்கியமாக, மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்கள் மற்றும் அரசு சார்ந்த அறிக்கைகள் என்று பல விசயங்களும் இந்தி மொழியில் மட்டும் இருப்பதாகவும், மற்ற மொழிகள் பேசுபவர்களுக்கு அது புரிவதில்லை என்றும், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது 'கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் இந்தியா அளித்த நெட் ஜீரோ உள்ளிட்ட உறுதி மொழிகள் குறித்தும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்தும், இது தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் ஆலோசித்து வருவதின் முக்கியத்துவம் குறித்தும் மக்களவையில் விவாதம்” நடைபெற்றது. 

அப்போது, நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “ஆத்ம நிர்பார் பாரத் அபியான்” என்ற, திட்டத்தின் பெயரை உச்சரிக்கச் சற்றே சிரமப்பட்டார். 

அத்துடன், அதைச் சரியாக உச்சரிக்கச் சபாநாயகரும் மற்ற வட மாநில உறுப்பினர்களும் உதவினர்.

இதனையடுத்து, பேசிய எம்.பி கனிமொழி, “இந்தியில் உள்ள மத்திய அரசின் திட்டத்தின் பெயர்கள் புரியும்படி இல்லை, இப்படிதான் இருக்கிறது”  என்று, தனது பாணியில் நகைச்சுவையாகக் கனிமொழி பேசினார். 

குறிப்பாக, “இது வெவ்வேறு மொழிகள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வதில்லை, மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை உச்சரிப்பதற்கே சிரமமாக இருக்கிறது” என்றும் சுட்டிக்காட்டிய கனமொழி, “எனவே, அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் மத்திய அரசின் திட்டங்களுக்கான பெயர்களை ஆங்கிலத்திலோ அல்லது அந்தந்த மாநில மொழிகளிலோ வைப்பதில் மத்திய அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது? என்றும், கனிமொழி கேள்வி எழுப்பினார்.

அப்போது, குறுக்கிட்டுப் பேசிய ஒரு உறுப்பினர், “உங்களுக்குப் புரியாமல் போனால், நாங்கள் என்ன செய்வது?” என்று கேட்க, சட்டென்று உடனே அதற்குப் பதிலடி கொடுத்த கனிமொழி “அப்படி என்றால், நான் தமிழில் பேசுகிறேன். உங்களுக்கு புரிகிறதா என்று சொல்லுங்கள்” என்று, தனது பாணியில் சிரித்துக்கொண்டே கேள்வி கேட்டார்.

இதனால், நாடாளுமன்றத்தில் இருந்த ஒட்டுமொத்த தமிழ் எம்.பி.க்களும் மேஜையை தட்டி வாய் விட்டே சிரித்துவிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

இதனிடையே, மக்களவையில் திமுக எம்.பி. கனமொழி, நகைச்சுவையுடன் பேசிய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.