“ராஜராஜ சோழனோடு தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்தியது திமுக அரசு தான்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்தோடு தெரிவித்து உள்ளார்.

தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் இன்று மிக பிரமாண்டமான அளவில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 44,525 பயனாளிகளுக்கு 238 கோடியே 40 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அத்துடன், 98 கோடியே 77 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட 90 பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

அதே போல், தஞ்சாவூர், கும்பகோணம், மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று கிட்டதட்ட 134 பணிகளுக்கு 894 கோடியே 56 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கும், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் 6 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் தஞ்சையில் இன்று வழங்கினார். 

அதன் தொடர்ச்சியாக, விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தஞ்சாவூர் என்றாலே காவிரி, காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் நடுவர் மன்றத்தை அமைக்க முதன் முதலில் வலியுறுத்தியவர் தலைவர் கருணாநிதி” என்று, குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய முதல்வர், “காவிரி உரிமையை காப்பாற்றிய இயக்கம் திமுக என்றும், காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வைத்தவரும் கலைஞர் தான் என்றும், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதை நிர்ணயித்து அறிவிக்கச் செய்தவரும் கலைஞர் தான்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “ராஜராஜ சோழனோடு தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்தியது திமுக அரசு தான் என்றும், தஞ்சையை பெருமைபடுத்திய அரசு திமுக அரசு தான்” என்றும், தஞ்சை மண்ணின் புகழ் பாடினார்.

“கடந்த 2 மாதத்தில் பெறப்பட்ட 48 ஆயிரம் மனுக்களில் 22 ஆயிரம் மனுக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தீர்வு கண்டு உள்ளார்” என்றும், சுட்டிக்காட்டினார்.

மேலும், “கொரோனா தாக்கம் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், முதலமைச்சர் உறுதி அளித்தார்.

குறிப்பாக, “தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே கொரோனா தொற்று பரவல்  தலைதூக்க தொடங்கிவிட்டது என்றும், அனைவரும் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்” என்றும் தமிழக மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.