பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ள நிலையில், 43 புதிய அமைச்சர்கள் தற்போது பதவி  ஏற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணியானது, கடந்த 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி 2-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டது. தற்போது, 2 ஆண்டுகள் முடிந்தும் இது வரையில் அமைச்சரவையில், எந்த விதமான மாற்றம் செய்யப்படாத நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா, சிரோமணி அகாலிதளம் கட்சிகள் அடுத்தடுத்து விலகிச் சென்றது. 

இதனால், அந்த கூட்டணி கட்சியில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

அத்துடன், மத்திய அமைச்சர்களாக இருந்த ராம்விலாஸ் பஸ்வானும், சுரேஷ் அங்காடியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், மத்திய அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களாக இருந்த பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் சற்று கூடுதலான இலாகாகளை கவனித்து வந்தனர்.

இதனால், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு மேலும் வாய்ப்புகள் வழங்கும் வகையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்து அதனை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்தார்.

இது தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 

அத்துடன், புதிய அமைச்சர்கள் பதவியேற்பதற்கு வசதியாக சில மத்திய அமைச்சர்கள் இன்று திடீரென தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, புதிதாக விரிவாக்கப்பட்டம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை இன்று மாலை 6 மணிக்கு மேல் ஒவ்வொருவராக பதிவி ஏற்றனர்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழா மாலை 6 அணி அளவில் தொடங்கியது. இதில், 43 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப் பட்டது. 

அதன் படி, ஒவ்வொருவராக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். புதிய  அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவி பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இதில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எல்.முருகன், தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜோதிர்ராதித்ய சிந்தியா, சர்பானந்தா சோனாவல், விரேந்திர குமார் உள்ளிட்ட 43 பேர் மத்திய அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

இந்த விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, புதிய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறாதது, அக்கட்சியினரிடையே பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.