மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் சமீபத்தில் சட்டப் பேரவை தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. 

இந்த தேர்தலின் போது, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.

இதற்கு எதிராக, மம்தா பானர்ஜி அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை மேற்கு வங்க உயர் நீதிமன்ற நீதிபதி கௌசிக் சந்தா விசாரித்து வந்தார்.

அப்போது, நீதிபதி மீது அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தரப்பினர், பகிரங்கமான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன் வைத்தனர். 

குறிப்பாக, நீதிபதி கௌசிக் சந்தா, பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும், அவர் ஒருதலைபட்சமாகவே செயல்படுகிறார்” என்றும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். 

அதன் தொடர்ச்சியாக, நீதிபதி கெளஷிக் சந்தா, இந்த வழக்கை விசாரிக்க மம்தா பானர்ஜியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்து மாநிலத்தின் தலைமை நீதிபதிக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி அனுப்பினார்.

அத்துடன், “நீதிபதி கெளஷிக் சந்தாவுக்கு பாஜக தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக” மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞரும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இப்படியாக எதிர்ப்புகள் எழவே, நீதிபதி கெளஷிக் சந்தா, இந்த வழக்கிலிருந்து உடனடியாக வெளியேறினார்.

தற்போது, இந்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “நீதித் துறையைத் தவறாகச் சித்தரிப்பதாக மம்தா பானர்ஜிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து” கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. 

அத்துடன், “மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்படைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு இந்த தொகை வழங்கப்படும்” என்றும், கொல்கத்தா நீதிமன்றம் கூறியது.

இது குறித்து, கருத்து தெரிவித்த நீதிபதி கௌசிக் சந்தா, “இது, மம்தா பானர்ஜியின் திட்டமிட்ட அணுகு முறை” என்றும் விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.