தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிலம்பரசன் பாடியுள்ள புதிய ஆல்பம் பாடலின் டீசர் இன்று வெளியானது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது U1 ரெக்கார்டுஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். இந்த புதிய ஆல்பம் பாடலின் மூலம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா A.K.ப்ரியன் என்ற புதிய சுயாதீன இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார்.
 
யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அபி & அபி என்டர்டைன்மென்ட் மற்றும் NOISE & GRAINS நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த  பாடலுக்கு பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டர் நடன இயக்கம் செய்கிறார். இயக்குனர் டாங்லி ஜம்போ இயக்கும் இந்தப் பாடலில் பிரபல இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். 

தப்பு பண்ணிட்டேன் என்ற இந்த புதிய ஆல்பம் பாடலை மேயாதமான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான விது அய்யனா ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்

தற்போது இந்தப் பாடலின் டீசர் வெளியானது.  சிலம்பரசனின் குரலில் வெளியாகியுள்ள இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. விரைவில் இந்த பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார். பரபரப்பாக இதன் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் மாநாடு திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.