உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ரசிகர்களின் பேராதரவோடு விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதி வாரம் வந்துவிட்டது. ஆரம்பம் முதலே பிக்பாஸில் சிறப்பாக விளையாடிய சிபி இறுதி வாரம் வரை சென்று வெற்றி பெறுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸில் வழங்கப்பட்ட 12 லட்ச ரூபாய் தொகையைப் பெற்றுக்கொண்டு வெளியேறினார். திடீரென சிபி வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் பலரும் சிபியின் முடிவை பாராட்டினர். 

முன்னதாக அமீர்  TICKET TO FINALE டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டு முதல் இறுதி போட்டியாளராக தேர்வானார். அமீரைத் தவிர மற்ற ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவரும் கடைசி EVICTION-க்கு நாமினேட் செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் நடைபெற்ற முக்கியமான டாஸ்க்கில் போட்டியாளர்களால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு இறுதி போட்டிக்கு செல்லும் 2-வது நபராக நிரூப் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து நேற்று (ஜனவரி 8ஆம் தேதி) கமல்ஹாசன் தொகுத்து வழங்க நடைபெற்ற பிக்பாஸ் எபிசோடில் ராஜு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 3-வது இறுதி போட்டியாளராக பிக்பாஸ் FINAL-க்குள் நுழைந்தார். தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியானது. இதில் பிரியங்கா 4-வது போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மீதமுள்ள பாவனி மற்றும் தாமரை இருவரில் யார் இறுதிப்போட்டிக்குள் நுழைகிறார்? யார் வெளியேறுகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்நிலையில் பாவனி இறுதிப்போட்டிக்குள் நுழையும் 5-வது போட்டியாளர் என்றும் தாமரைச்செல்வி இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறியதோடு கடைசி வார EVICTION-ல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று (ஜனவரி 9) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதும் பாவனி இறுதிப்போட்டிக்கு தேர்வாவதும் ஒளிபரப்பாகும்.