தமிழகத்தில் கொரோனா பரவல் அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், இன்னும் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா 3 வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைகின்றன. 

எனினும், தற்போதைய சில கட்டுப்பாடுகளையும் தாண்டி, கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது தீவிரமாகவே பரவி வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 

இது மட்டுமில்லாமல், ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது.

இப்படியாக தீவிரமாக பரவி வரும் கொருானா மற்றும் ஓமைக்ரான் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி முதல் தினமும் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

அத்துடன், ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, “அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்” என்றும், போலீசார் எச்சரித்து உள்ளனர்.

இந்த நிலையில் தான், தமிழகத்தின் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, அது தொடர்பான இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாளைய தினம் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவக் கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன்படி, தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், தகவல் வெளியாகி உள்ளது. இதனால்,  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.