5 மாநில தேர்தல் தேதி குறித்து டெல்லி விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ELECTION COMMISIONஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, ஒமைக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

இச்சூழலில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்களை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். இதன்படி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா உடன் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் 5 மாநில தேர்தல் தேதி குறித்து டெல்லி விஞ்ஞான் பவனில்  தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பாதிப்பு  தேர்தலை நடத்துவதற்கு  சவாலாக மாற்றியுள்ளது. வாக்காளர்களையும், கட்சிகளையும் காப்பாற்றும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும்.

தேர்தல் ஆணையத்திற்கு மூன்று நோக்கங்கள் உள்ளன:
1.  பாதுகாப்பான தேர்தல்கள்
2. எளிதான தேர்தல்
3. அதிகபட்ச வாக்காளர்  வாக்களிப்பு 

அதனைத்தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக நாங்கள் தேர்தல்  பணியாற்றி வருகிறோம். ஒமைக்ரானை கருத்தில் கொண்டு, சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம். 5 மாநில தேர்தலில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் பங்கேற்பர். அவர்களில் 8.55 கோடி பெண் வாக்காளர்கள். 24.98 லட்சம் பேர் முதல் முறை வாக்கு செலுத்தும் வாக்காளர்கள் என தெரிவித்தார்.

5 மாநில தேர்தலில் வாக்களிக்க உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம். சி.வினிலன்ஸ் ஆப் மூலம் புகார்கள் தெரிவிக்கலாம். சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவ்டிக்கை எடுப்பார்கள்.புகார் தெரிவித்த 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். 2017 உடன் ஒப்பிடும்போது வாக்குச் சாவடிகள் 16% அதிகரித்துள்ளன.

மேலும் காத்திருப்பு பகுதி, கழிப்பறைகள், சாய்வுதளங்கள், தரை தளங்கள், சானிடைசர்கள், முகக் கவசங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 620 வாக்குச் சாவடிகள் பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும். மூத்த குடிமக்கள் 80+ சான்றிதழைக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு வசதி செய்து தரப்படும்.  5 மாநிலங்களில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. மேலும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஆன்லைனிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

உத்தரபிரதேசத்துக்கு  7 கட்ட தேர்தல், மணிப்பூர் தேர்தல் 2 கட்டம், பஞ்சாப்,கோவா, உத்தரகாண்ட்  - ஒரே கட்ட தேர்தல். முதல் கட்டம் :  பிப்ரவரி 10 ந் தேதி உத்தபிரதேசம். 2- வது கட்டம் :  பிப்ரவரி 14 ந் தேதி உத்தபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் (ஒரே கட்ட தேர்தல்). 3- வது கட்டம் : பிப்ரவரி 20 ந் தேதி உத்தபிரதேசம். 4- வது கட்டம் : பிப்ரவரி 23 ந் தேதி உத்தபிரதேசம். 5- வது கட்டம் :  பிப்ரவரி 27-ம் தேதி உத்தபிரதேசம், மணீப்பூர் (முதல் கட்டம்) 6- வது கட்டம் : மார்ச் 3 ந் தேதி உத்தபிரதேசம், மணீப்பூர் (இரண்டாம்  கட்டம்). 7- வது கட்டம் : மார்ச் 7  ந் தேதி உத்தபிரதேசம், வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி என தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.