பிரபல OTT தளமான ஜீ 5 தொடர்ந்து பல அட்டகாசமான திரைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக ஜீ 5-ல் நேரடியாக ரிலீசாக உள்ள திரைப்படம் முதல் நீ முடிவும் நீ. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான தர்புகா சிவா முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

ராஜதந்திரம் மற்றும் நடிகர் தனுஷின் தொடரி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த தர்புகா சிவா, இசையமைப்பாளராக சசிகுமாரின் கிடாரி, உதயநிதி ஸ்டாலினின் நிமிர், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் ராக்கி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தர்புகா சிவா சிவா முதல் முறை இயக்குனராக களமிறங்கியுள்ள திரைப்படம் தான் முதல் நீ முடிவும் நீ. சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ள முதல் நீ முடிவும் நீ திரைப்படத்திற்கு சுஜித் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

முதல் நீ முடிவும் நீ படத்தில் அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், ஹரிஷ் குமார், சரண் குமார், ராகுல் கண்ணன், மஞ்சுநாத், மீத்தா ரகுநாத், வருண் ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் வருகிற ஜனவரி 21-ம் தேதி முதல் நீ முடிவும் நீ திரைப்படம் நேரடியாக ஜீ 5 OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.