தெலுங்குத் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் மகேஷ் பாபு அடுத்ததாக இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் உருவாகும் சர்க்காரு வாரி பாட்டா படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். வருகிற ஏப்ரல் மாதம் உலகெங்கும் சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மகேஷ்பாபுவின் மூத்த சகோதரர் ரமேஷ் பாபு. கடந்த 1974-ஆம் ஆண்டு வெளிவந்த சீதாராம ராஜூ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ரமேஷ் பாபு, தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிப்பில் இருந்து விலகிய ரமேஷ் பாபு தயாரிப்பாளராக களமிறங்கி மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த அர்ஜுன் மற்றும் அதிதி ஆகிய திரைப்படங்களை தயாரித்தார்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 8ஆம் தேதி) நடிகரும் தயாரிப்பாளருமான ரமேஷ்பாபு காலமானார். நீண்ட காலமாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ரமேஷ் பாபு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன. உயிரிழந்த ரமேஷ்பாபுவுக்கு வயது 56.

நடிகர் மகேஷ் பாபுவின் மூத்த சகோதரரும் நடிகரும் தயாரிப்பாளருமான ரமேஷ் பாபுவின் மறைவிற்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. முன்னதாக சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் மகேஷ் பாபு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அவரது சகோதரர் ரமேஷ்பாபு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ரமேஷ் பாபுவின் மறைவால் சோகத்தில் மூழ்கி உள்ள நடிகர் மகேஷ்பாபுவின்  குடும்பத்தினருக்கு திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.