கேரளாவில் கன மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அங்கு திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கும் நிலையில், அங்கு நடைபெற்ற காதல் திருமணம் ஒன்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள வீடுகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதுடன், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

இந்த சூழலில் தான் கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த ஆகாஷ், ஐஸ்வர்யாவுக்கு ஜோடிக்கு நேற்றைய தினம் திருமணம் நடத்த வேண்டும் என்று, ஏற்கனவே இரு தரப்பைச் சேர்ந்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.

அதாவது, “ஆகாஷ் - ஐஸ்வர்யா” இருவருமே மருத்துவப் பணியாளர்களாக பணியாற்றி வந்த நிலையில், கொரோனா காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய போது, இவர்களுக்குள் காதல் மலர்ந்து உள்ளது.

இந்த காதல் விசயத்தை, இருவரும் தங்களது வீட்டில் சொன்ன நிலையில், ஐஸ்வர்யா உயர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. 

இதனையடுத்து, ஆகாஷை - ஐஸ்வர்யா ஜோடி, முறைப்படி கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனாலும், முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஐஸ்வர்யாவின் விருப்பமாக இருந்தால், இது தொடர்பாக ஆலோசித்து வந்தனர்.

இதனால் ஆகாஷின் சொந்த ஊரான தகழியிலுள்ள தாளவாடியில் இருக்கும் பண்ணையூர்காவு கோயிலில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். 

அதன்படி, அக்டோபர் 18 ஆம் தேதிக்கு முன்பதிவும் அவர்கள் செய்திருந்தனர். ஆனால், அங்கு கடந்த சில நாட்களாகக் கொட்டி தீர்க்கும் கன மழையால், பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது. 

மழை கொட்டி தீர்த்து வெள்ளம் சூழ்ந்ததால் திருமணம் செய்ய முடியாது என்று கோயில் நிர்வாகம் தெரிவிக்கவே, விடாப்பிடியாக இருந்த அந்த ஜோடியானது, கோயில் சார்பில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய அலுமினியப் பாத்திரத்தைப் பரிசல் படகாகப் பயன்படுத்தி மணமக்கள் இருவரும் கோயிலுக்குள் அழைத்து வரப்பட்டனர். 

இதனையடுத்து, மணமக்கள் இருவரும் அந்த சமையல் பாத்திரத்தில் அமர்ந்த படி, ஊர் முறைப்படி திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.