திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருந்ததை மறைத்து ஃபேஸ்புக் மூலம் பழகி காதலித்து வந்த இளம் பெண், அவரை நம்பி வீட்டை விட்டுச் சென்ற நிலையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஐஸ்வர்யா என்ற இளம் பெண், தனது கணவர் ரெங்கன் உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

ஐஸ்வர்யா வீட்டில் இருந்து வந்த நிலையில், அதிக நேரம் ஃபேஸ்புக்கில் மூழ்கி கிடந்து உள்ளார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதியை சேர்ந்த 31 வயதான விஜய் என்ற இளைஞனுடன் ஐஸ்வர்யாவுக்கு ஃபேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆகி நட்பாகப் பழகி வந்துள்ளார்.

அப்போது, அவர்கள் இருவரும் தங்களது அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளனர். ஆனால், அப்போது தனக்குத் திருமணம் ஆக வில்லை என்றும், தனக்கு 2 குழந்தைகள் இருப்பதையும் ஐஸ்வர்யா மறைத்து, அந்த இளைஞனுடன் பேசி பழகி வந்துள்ளார்.

அதே நேரத்தில், அவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்களைப் பகிர்ந்துகொண்டு இருவரும் அதிக நேரம் பேசி பழகி வந்துள்ளனர். 

ஒரு கட்டத்தில், இளம் பெண் ஐஸ்வர்யா, தான் திருமணம் ஆகாத பெண் என்று கூறியதால், அந்த இளம் பெண்ணால் கவரப்பட்ட விஜய், ஐஸ்வர்யாவிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், நான் உன்னை காதலிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அந்த நேரத்தில், ஐஸ்வர்யாவுக்கும் அவரது கணவர் ரெங்கனுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த வாரம் ஐஸ்வர்யா தனத வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். 

இதனால், மனைவியை காணவில்லை என்று அவரது கணவர் ரங்கன், அங்குள்ள திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஐஸ்வர்யாவை தேடி வந்தனர். 

அத்துடன், வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா, நேராக ராமநாதபுரம் சென்று அங்கு விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறார். 

அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிய நிலையில், “நான் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டதாக” ஐஸ்வர்யா கூறி இருக்கிறார்.  

மேலும், “விஜய், இனி நீங்கள் இல்லாமல் இனி நான் இல்லை. நீங்கள் தான் என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று, உடனே திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.

அப்போது பேச்சுவாக்கில் “இனி என்னால், என் வீட்டிற்கு திரும்பி செல்ல முடியாது என்றும், அப்படிச் சென்றால் என் கணவர் என்னை எங்கே சென்று வந்தாய் என்று விசாரிப்பார்” என்றும், கூறியிருக்கிறார். 

அப்போது தான் ஐஸ்வர்யா திருமணமானவர் என்பது விஜய்க்கு தெரிய வந்திருக்கிறது. இதனால், ஐஸ்வர்யாவுடன் விஜய் சண்டைக்குச் சென்றிருக்கிறார். 

மேலும், “என்னை நீ என்னை ஏமாற்றி விட்டாய், திருமணமாகாத பெண் என்று சொல்லி என்னுடன் பழகி விட்டு, இப்போது 2 குழந்தைகள் இருக்கிறது என்று சொல்லுகிறாய். ஆனாலும் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துவது நியாயம் இல்லை” என்றும், கூறி விஜய் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

குறிப்பாக, “நீ உடனே உன் வீட்டிற்கு திரும்பிச் சென்று விடு” என்று, விஜய் கூறவே,  ஐஸ்வர்யா அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால், வேறு வழியின்றி, காதலன் விஜய், ராமநாதபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துவிட்டு ஐஸ்வர்யாவை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார். 

இதனையடுத்து, ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் இருப்பதை, அவரது கணவரிடம் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கூறியுள்ளனர். அப்போது, கணவருடன் செல்ல அந்த பெண் மறுத்து உள்ளார். 

இதனையடுத்து, ஐஸ்வர்யாவை ஒரு நாள் இரவு மட்டும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் பெண்கள் ஆலோசனை வழங்கும் மையத்தில் தங்க வைத்து உள்ளார். 

இந்த சூழலில், அவர் தங்கியிருந்த அறையில் இருக்கும் கழிவறையில் அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இதனையடுத்து, அங்கு வந்த போலீசார், ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில், “காதலனை நம்பி சென்ற நிலையில் அவர் கைவிட்டதால், எந்த முகத்தை வைத்துக்கொண்டு இனி குழந்தைகளிடம் பேசுவது? வீடு திரும்பி கணவரிடம் எப்படி குடும்பம் நடத்துவது? ஊரில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களை எப்படி எல்லாம் சமாளிப்பது?”  என்று கடும் மன உளைச்சலில் ஐஸ்வர்யா இருந்துள்ளார். இதனையடுத்தே, அவர் அதிகாலை நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்” என்றும், போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.