தேர்தல் பிரச்சார மேடையில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சவுகான் முன்னிலையில், பாஜக பெண் வேட்பாளரிடம் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் அத்து மீறி நடந்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மத்தியப் பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசங்களான தாத்ரா, நகர் ஹவேலி ஆகியவற்றில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் மற்றும் மத்தியப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 16 சட்டமன்ற இடங்களுக்கான இடைத் தேர்தல்கள் வரும் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதில், மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டம் ராய்கான், தனித் தொகுதியும் ஒன்றாக இருக்கிறது.

இங்கு, பாஜக சார்பில் பிரதிமா பாக்ரி என்ற பெண், வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அந்த பெண் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் பலரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

மேலும், மத்தியப் பிரதேசம் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில் தான், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று அங்குள்ள ராய்கானில் பாஜக வேட்பாளர் பிரதிமாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது, இந்த பிராச்சாரத்திற்காக போடப்பட்டிருந்த பொது மேடையில் நடந்த கூட்டத்திற்கு அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வருகை தந்திருந்தார்.

அந்த நேரத்தில், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மேடையில் அமர்ந்திருக்க, அவருக்கு அருகே பெண் வேட்பாளர் பிரதிமா பாக்ரி அமர்ந்திருந்தார். அதற்கு அடுத்தாற்போல், அந்த மாநிலத்தின் கனிம வளத் துறை அமைச்சர் பிரிஜேந்திர பிரதாப் சிங் அமர்ந்திருந்தார்.

அப்போது, முதலமைச்சரை பார்த்து திரும்பி பேசும் சாக்கில், பெண் வேட்பாளர் பிரதிமா பாக்ரிவின் தொடை மீது, மாநில அமைச்சர் பிரிஜேந்திர பிரதாப் சிங் தனது கைகளை அப்படியே வைத்த படி, சிவராஜ் சிங் சவுகானிடம் பேசினார். இதனால், பிரதிமா பாக்ரிக்கு சங்கோஜமாக இருந்தது. அது, அவரது முகத்தில் அப்படியே தெரிந்தது. ஆனாலும், அந்த பெண் வேட்பாளரால் உடனடியாக என்ன செய்வது என்று தெரியாமல், தனது தொடையின் மீது இருந்த அந்த பாஜக அமைச்சரின் கையை தட்டிவிட முற்படாமலும் தவித்துப்போனார்.

அதன் தொடர்ச்சியாக, அடுத்த சிறிது நேரம் கழித்து அதே கூட்டத்தில், முதலமைச்சர் ஓட்டு கேட்டு நின்றபடி உரையாற்றிக்கொண்டு இருந்தார். 

அப்போது, அவரது அருகே பெண் வேட்பாளர் பிரதிமா பாக்ரி கை கும்பிட்ட படி அங்கே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த மாநில அமைச்சர் பிரிஜேந்திர சிங் யாதவ், பெண் வேட்பாளர் பிரதிபா பாக்ரி தலையின் கூந்தலுக்குள் கை விட்டு ஏதோ செய்தார். இதனால், திடுக்கிட்ட பெண் வேட்பாளர் பிரதிமா பாக்ரி, திரும்பிப் பார்த்த போது, ​​பாஜக மாநில அமைச்சர் தனது கண்ணாடிகளை நோக்கி கை காட்டினார். 

அதாவது, “அவரது கண்ணாடி கூந்தல் முடியில் சிக்கியதாகவும், முடியை விடுவிக்க முற்பட்டதாகவும்” அமைச்சர் கூறினார். 

இப்படியாக, பாஜக அமைச்சரின் இந்த 2 விதமான செயல்கள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், இந்த செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “வெட்கமில்லாத செயல். பாஜக பெண் வேட்பாளரிடம், பாஜக அமைச்சர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். பாஜக வேட்பாளர் சங்கடமாக இருப்பது அவரது முகத்திலேயே தெரிகிறது. சிவராஜ் சார், பாஜக தலைவர்களிடமிருந்து மகளைக் காப்பாற்றுங்கள்” என்று, வன்மையாக கண்டித்து உள்ளது.

முன்னதாக, கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது, அங்கு நடந்த அணை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த முன்னாள் அமைச்சர் அம்பரீஷின் மனைவி சுமலதாவின் இடுப்பில் கை வைத்து, தனது அருகே அவர் இழுத்து நிறுத்தியதும், உடனடியாக சுமலதா அவரது கையை தட்டி விட்டதும்” அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.