உறைய வைக்கும் கடும் குளிருக்கு மத்தியிலும் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 27 வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் குளிர்காலத்தின் தொடக்கமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. 

முக்கியமாக, தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிக கடுமையான குளிர் நிலவி வருவதால், பொது மக்கள் மிகவும் கடுமையாக அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த குளிரில் இருந்து மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

அத்துடன், கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு குளிரின் தாக்கம், வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக டெல்லி மக்கள் கூறுகின்றனர். 

மேலும், பனிமூட்டம் நிலவுவதால் அதிகாலையில் வாகனங்களை இயக்குவது பெரும் சிரமமாக இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் கவலைத் தெரிவிக்கின்றனர். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.4 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது, இந்த காலகட்டத்தில் வழக்கமாகப் பதிவாகும் வெப்பநிலையை விட 5 டிகிரி குறைவு என்றும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடும் பனியிலும், குளிரிலும் நடு நடுங்கி, தங்கள் உயிரையே பொருட்படுத்தாமல் இன்றுடன் 27 வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் நாளாக நாளாக குளிரின் வீரியம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு கடுமையான குளிர் வாட்டியபோதும் விவசாயிகளின் மன உறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்பதில், விவசாயிகள் இதுவரை 36 பேர் வரை உயிரிழந்த நிலையிலும், தங்களது முடிவில் உறுதியாக இருந்து வருகின்றனர். அத்துடன், தங்களது போராட்டத்தை பின் வாங்காமல், மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆனால், ஈரம் இல்லாத மத்திய அரசு அப்படியே அமைதியாக இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதன் படி, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நேற்று முதல் டெல்லியில் சுழற்சி முறையில் விவசாயிகள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவர்கள், செவிலியர்கள் நேற்றைய தினம் களமிறங்கிப் போராடினார்கள்.

அதே நேரத்தில், டெல்லி சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்யும், சோனு வர்தியாவும் அவரது குழுவும் கவனம் பெற்றுள்ளனர். அவர்கள் விவசாயிகளுக்கு முடி திருத்தம் செய்து வரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரிதாக வைரலாகி வருகிறது. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால், வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த வித தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதும், மாற்றுவழிகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பதும், போக்குவரத்து நெரிசல்கள் தொடர்வதும் டெல்லி மக்களைப் பெரிய அளவில் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எப்போது, இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து டெல்லி மக்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.