உச்சக்கட்ட மது போதையில் இருந்த பாகன் ஒருவன், தன்னுடைய யானையை வைத்து பொது மக்களை விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
 
சுற்றுலாவுக்குப் பெயர் போன கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டத்தில் உள்ள ஏனத்தேரி பகுதி வழியாகத் தனியாருக்குச் சொந்தமான பெண் யானை ஒன்று உள்ளது. 

இந்த பெண் யானையை, அந்த பகுதியைச் சேர்ந்த பாகன் ஒருவர் பராமரித்து வந்தார். அத்துடன், மது போதைக்கு கடும் அடிமையான அந்த யானையின் பாகன், எப்போதும் போதையிலேயே இருந்து வருபவர் என்று கூறப்படுகிறது.

அத்துடன், இந்த பாகன் மது அருந்திவிட்டு போதையில், அந்த பகுதியில் செல்பவர்களிடம் தேவையில்லாமல் சண்டைக்கும் சென்று வந்தார் என்றும் கூறப்படுகிறது. 

அதன் உச்சக்கட்டமாக இன்றும் கடுமையான மது போதையில் இருந்த அந்த பாகன், தன்னுடைய யானையை அழைத்து வந்து, அந்த சாலை வழியாக அழைத்துச் சென்று உள்ளார். 

அந்த பாகன் நிதானமாக இல்லாமல், யானையைச் சரியாக வழி நடத்தாமல் அவர் போதையில் தடுமாறிக்கொண்டு இருந்ததால், அந்த வழியாகச் சென்ற பொது மக்கள், யானையை பார்த்து பயந்து போய், “இந்த யானையை மரத்தில் கட்டிப்போடுமாறு” பாகனிடம் கூறி உள்ளனர்.

அப்போது, கடும் மது போதையில் இருந்த யானையின் பாகன், பொது மக்கள் கூறியதால் கோபம் அடைந்து, தனது யானையை வைத்து, அந்த வழியாகச் சென்ற பொது மக்களை விரட்டி உள்ளார். 

இதனால், அந்த வழியாகச் சென்ற பொது மக்கள் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அத்துடன், இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கேரள காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பாகனை அதட்டி உள்ளனர். இதனால், இன்னும் கோபம் அடைந்த அந்த பாகன், தன்னுடைய யானையை வைத்து போலீசாரையும் விரட்டி உள்ளான். 

இதனால், பயந்து ஓடிய போலீசார், கேரள வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, வனத்துறையினர் மற்றொரு யானை பாகனுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, “அந்த யானையை மரத்தில் கட்டிப் போட்டனர். 

அதன் பிறகு, மது போதையில் இருந்த யானை பாகன் மீது, வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்தனர். 

இந்த நிலையில், பொது மக்களை யானையை வைத்து, விரட்டியடித்த சம்பவத்தை, அந்த வழியாகச் சென்ற சிலர், தங்களது செல்போனில் வீடியோவாக படம் பிடித்தனர். இந்த காட்சிகள் எல்லாம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, தற்பேர்து வைரலாகி வருகிறது.