“வீரப்பனுக்கே ஆயுதம் கடத்தியது நாங்க தான் தெரியும்ல” என்று, போதையில் போலீசாரிடம் 2 பேர் ரவுசு காட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தான் இரு இளைஞர்கள் போலீசாரிடம் ரவுசு காட்டி உள்ளனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான ராஜேந்திரன், மணிகண்டன் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள் ஆவர்.

தற்போது, கோவையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து காணப்படுவதால், அந்த மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடையில் பல மாதங்களுக்கு முன்பு, நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால், மது பிரியர்கள் பலரும் டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களைப் பெற்றுச் செல்கின்றனர். இதனால், கோவை மாவட்டத்தின் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட, சற்று கூடுதலாக மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டன.

இந்த சூழலில் தான், நீண்ட நாள்களுக்குப் பிறகு அந்த பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான ராஜேந்திரன், மணிகண்டன் ஆகிய இருவரும், மது அருந்திவிட்டு, அந்த பகுதியில் உள்ள சாலையில் வந்து கடும் ரகளையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த போலீசார், அவர்களை அங்கிருந்து செல்லும் படி அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் யாருக்கும் அடங்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அமர வைத்து உள்ளனர். ஆனால், காவல் நிலையத்திலும் அவர்கள் இருவரும் கடும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் சற்று அசந்த நேரமாகப் பார்த்து, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி வெளியே ஓடி வந்துள்ளனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்கள் இருவரையும் ஓடி வந்து அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலையில் மடக்கிப் பிடித்தனர்.

அப்போது, ஓடி வந்து பிடித்த காவல் ஆய்வாளர் சண்முகம், அவர்கள் இருவரையும் எச்சரித்து உள்ளார். அப்போது, வசனம் பேசிய அவர்கள் இருவரும், “நாங்கள் என்ன திருட்டில் ஈடுபட்டோமா?” என கேள்வி மேல் கேள்வி கேட்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, போலீசார் அவர்களின் சட்டையைப் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அதில் ஒருவர் போலீசாரிடம் “என் சட்டையை விடுங்கள்” என்று, தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
இதன் உச்சக்கட்டமாகக் குடிபோதையில் இருந்த அந்த இளைஞரை, போலீசார் ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதனால், இன்னும் ரவுசு காட்டி தொடங்கிய அந்த போதை இளைஞர், வீடியோ எடுக்கும் போலீசாரை பார்த்து “வீரப்பனுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததே நாங்க தான் சார்” என்று, அலப்பறைகளைக் கூட்டினார்.

இப்படியாக, குடிபோதையில் போலீசாரை அவர் தொடர்ந்து கலாய்த்துக்கொண்டே இருந்ததால், 108 ஆம்புலன்சை வரவழைத்த போலீசார், போதையில் இருந்த அவர்கள் இருவரையும் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் தொடர்ச்சியாக, போலீசாரிடம் இருவரும் அலப்பறை செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.