முதல்வராகப் பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தார்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல்வராக ஜுன் 8-ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற போது அவருடன் 24 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவின்போது தற்பொழுது பதவியேற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் இரண்டரை ஆண்டுகளுக்கு மக்களுக்கு சேவை செய்ய உள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 2024-ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு தனது அமைச்சரவை முற்றிலும் மாற்றி அமைக்கிறார் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. இந்நிலையில்  இரண்டரை ஆண்டுகள் நிறைவு பெற்று மூன்று ஆண்டுகள் நெருங்கி வரக் கூடிய நிலையில் புதிய அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக கடந்த வாரம் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு 24 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் வழங்கினர். 

அதன்பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், ஏற்கனவே முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தபடி புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக எங்களை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி நாங்கள்  முழு மனதுடன் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த மூன்று ஆண்டுகளில் செய்த நல திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சென்று 2024-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் கட்சியை பலப்படுத்தி ஆட்சிக்கு வரவேண்டும். அவ்வாறு வரும்பொழுது தற்பொழுது ராஜினாமா செய்த அனைவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் அதனைத்தொடர்ந்து ஏற்கனவே இருந்த அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் பதவி வகித்த நிலையில் அதே போன்று தற்போதும் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு   7 பேர் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் புதிய அமைச்சரவையில் 8 முதல் 9 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 5 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது புதிய அமைச்சரவையில் 6 பேருக்கு வாய்ப்பு வழங்கவுள்ளது, 13 பெண் எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஒரு துணை முதல்வர் உள்பட 3 அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ஐந்து பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக ஆளும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.