“இந்தியாவில் நாங்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறோம்” என்று, அல்கொய்தா தலைவருக்கு இஸ்லாமிய மாணவி முஸ்கானின் தந்தை பதிலடி கொடுத்து உள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அதாவது, கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம், இந்தியாவையும் தாண்டி உலக அளவில் கடும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள மாண்டியா கல்லூரியில் ஒரு இஸ்லாமிய மாணவி ஒருவர், வழக்கம் போல் பர்தா அணிந்து கொண்டு, கல்லூரிக்கு வந்து உள்ளார். அப்போது, காவித் துண்டு அணிந்திருந்த 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அங்கு வந்து அந்த இஸ்லாமிய மாணவியை திடீரென்று சூழ்ந்துக்கொண்டு “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் எழுப்பி, அந்த மாணவியை சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணும் பதிலுக்கு “அல்லாஹு அக்பர்” என்று, எதிர் முழக்கம் எழுப்பினார். ஆனாலும், அந்த பெண்ணிடம் “ஜெய் ஶ்ரீராம்” என்று, முழக்கமிட்டபடி, தோழில் காவி துண்டு போட்ட மாணவர்கள் 30 க்கும் மேற்பட்டவர்கள் அந்த மாணவியை சூழந்துகொண்டு, “ஜெய் ஶ்ரீராம்” என்று, முழக்கமிட்டபடியே பின் தொடர்ந்து ஓடி வந்தனர். அப்போது, அந்த கல்லூரியின் ஆசிரியர் ஒருவர், அந்த மாணவர்களை தடுத்து அந்த இஸ்லாமிய மாணவியை பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலானது.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வாயிலாக உலகம் முழுவதும் பரவிய நிலையில், இந்த வீடியோவைப் பார்த்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்சவாஹிரி, “சம்மந்தப்பட்ட இஸ்லாமிய மாணவியான முஸ்கான் கானை, வெகுவாக பாராட்டி” வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில், “மாணவி முஸ்கான் கானை, ‘எங்களது முஜாஹித் சகோதரி’ என்றும், ‘துணிச்சலான சாதனை பெண்’ என்றும், புகழாரம் சூட்டியிருந்தார்.

அத்துடன், “ ‘இந்து இந்தியாவில் எங்களது உண்மை நிலையை வெளிப்படுத்திய சகோதரி முஸ்கான் கானுக்கு, அல்லா வெகுமதி வழங்கட்டும்” என்றும், அவர் ஆசீர்வாதிக்கும் வகையில், பேயிருந்தார்.

இந்த நிலையில் தான், அந்த மாணவி முஸ்கான் கானின் தந்தையான முகமது உசேன் கான், இது குறித்து முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய போது, “இது முற்றிலும் தவறு” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “இந்தியாவில் நானும், என் குடும்பத்தினரும் அமைதியாக வாழ்ந்து வருகிறோம், எங்கள் குடும்பத்தின் அமைதியை பாதிக்கும் வகையில் எந்த சம்பவங்களும் நடக்கவில்லை” என்றும், கூறினார்.

மேலும், “அந்த வீடியோ குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், அய்மான் அல்சவாஹிரி யார் என்றே எனக்குத் தெரியாது” என்றும், அவர் தெரிவித்தார். 

“நீங்கள் சொல்வதுபோல், அவர் அரேபிய மொழியில் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் என்றும், நாங்கள் எல்லோரும் இங்கு அன்பு, நம்பிக்கையுடன் சகோதரர்களாக ஒற்றுமையாக வசித்து வருகிறோம்” என்றும், பேசினார்.

“இந்த விஷயம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்” என்றும், வலியுறுத்தினார்.

குறிப்பாக, “பொது மக்கள் இதுபற்றி என்ன வேண்டுமானால் பேசலாம், ஆனல் இது தேவையில்லாமல் எங்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் என்றும். அவர் எங்களைப் பற்றி பேசுவதை நாங்கள் விரும்பவில்லை” என்றும், அவர் தனது பேச்சை முடித்துக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, இது குறித்து பேசிய சம்மந்தப்பட்ட மாணவியான முஸ்கான் கான், “அல்கொய்தா தலைவர் கூறியது முற்றிலும் தவறு” என்று, கூறினார்.

இதனையடுத்து, இந்த வீடியோ குறித்தும், அதன் பின்னணி குறித்தும், மாணவிக்கும் -  அல்கொய்தா அமைப்புக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?” என்பது பற்றியும் எஸ்ஐடிஇ நுண்ணறிவு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.