பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் பெரும்பாலும் மோசம் அடைந்து இருப்பதாகவும்,  நாட்டில் பணவீக்கம் கண்டு கொள்ளப்படவில்லை” என்றும், சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசு நேற்றைய தினம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், இதற்கு முன்னதாக மத்திய அரசின் இந்த பட்ஜெட்டையொட்டி நாட்டில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து நாடு தழுவிய கருத்து கணிப்பை சி வோட்டர் நிறுவனம் கடந்த வாரம் நடத்தியது.

அதன் படி, நாடு முழுவதும் கிட்டதட்ட 3 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில், 62.4 சதவீதம் பேர் “பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு, பண வீக்கம் கண்டுகொள்ளப்படாததால், இதன் விளைவாக விலைவாசி உயர்த்திருப்பதாகவும்” கூறி உள்ளனர்.

அத்துடன், 27.5 சதவீத மக்கள் “இந்த விலையேற்றம் சரி செய்யப்பட்டு உள்ளது” என்றும், மற்றவர்கள் “இந்த விலை ஏற்றத்தில் மாற்றம் எதுவுமில்லை” என்றும், கருத்து தெரிவித்து உள்ளனர்.

மேலும், “இந்தியாவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நடவடிக்கைகளை பொறுத்தவரை மத்திய அரசின் செயல்பாடுகள் எதிர்பார்த்ததை காட்டிலும் படு மோசம்” என்று, 38 சதவீத மக்கள் கருத்து கூறி உள்ளனர்.

அதே போல், 36.4 சதவீதம் பேர் “இந்தியாவில் எதிர்பார்த்ததை போன்றே பொருளாதாரம் இருப்பதாகவும்” கருத்து கூறியுள்ளனர்.

அதே சமயம், 25.6 சதவீதம் பேர் “நாட்டில் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பான பொருளாதாரம் இருக்கிறது” என்றும், தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

அது போல், கடந்த ஓர் ஆண்டில் இந்தியாவில் சாமானிய பொது மக்களின் வாழ்க்கை தரம் பற்றிய கேள்விக்கு 42.4 சதவீதம் பேர் “மோசமாக உள்ளது” என்றும், தங்களது கருத்துக்களை பதிவு செய்து உள்ளனர்.

இவற்றுடன், 32.8 சதவீதம் பேர் “இந்தியாவில் எங்களது வாழ்க்கை தரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என்றும், 24.8 சதவீதம் பேர் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும்” கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

அதே போல், “அடுத்த ஓராண்டில் இந்திய மக்களின் வாழ்க்கை தரம் எப்படி இருக்கலாம்?” என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளவர்களில், 37.7 சதவீதம் பேர் “இந்திய மக்களின் வாழ்க்கை தரம் அடுத்த ஆண்டில் முன்னேற்றம் காணப்படும்” என்று, புதிய நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். 

மேலும், 31.3 சதவீதம் பேர் “இந்திய மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் மோசம் அடையும் என்றும், 31 சதவீத மக்கள் மாற்றம் இருக்காது” என்றும், கருத்து கூறியுள்ளனர்.

குறிப்பாக, “4 பேரை கொண்ட குடும்பத்தினர் சம்பாதிக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மாத வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்” என்கிற கேள்விக்கு 83.3 சதவீதம் பேர் “வரி விலக்கு தேவை” என்று, பதில் அளித்து உள்ளனர். தற்போது, இந்த கருத்து கணிப்பு முடிவுகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.