தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் மகேஷ்பாபு பல சூப்பர் ஹிட் மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து தென்னிந்திய அளவில் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார். கடைசியாக மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த சரிலெரு நீக்கேவரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து முன்னணி தெலுங்கு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள  திரைப்படம் சர்க்காரு வாரி பாட்டா. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகின்ற மே 12ஆம் தேதி சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முன்னணி தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார் மகேஷ்பாபு.

ஹாரிக்கா & ஹஸின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் #SSMB28 படத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.  மதி ஒளிப்பதிவில் நவீன் நூலி படத்தொகுப்பு செய்யும் #SSMB28 படத்துக்கு தமன் இசை அமைக்கிறார். இந்நிலையில் #SSMB28 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 3ஆம் தேதி) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.