நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியதன் எதிரொலியாக, “#GetOutRavi” என்ற, ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஏராளமான மாணவ, மாணவிகள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதாவது, “இந்தியா முழுவதும் மருத்துவக் கல்வியில் சேருவதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 

ஆனால், இந்த நீட் தேர்வானது மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் படி கொண்டு வரப்பட்டதால், மாநிலக் கல்வியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை இருந்து வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. 

மாநிலத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட, நீட் தேர்வில் தோல்வி அடையும் நிலை உருவாகி உள்ளது என்றும், இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள்” நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

அதன் படி, நீட் தேர்வுக்கு எதிரான புதிய சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக ஆளுநர் இந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல், தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வந்தார் என்றும், அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த நிலையில் தான், கடந்த 4 மாதமாக இந்த நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு குறித்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார். 

இப்படியான, தமிழக ஆளுநர் ரவியின் இந்த முடிவு, தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியயும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக ஆளுநரின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்டோர் மிக கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.
 
முக்கியமாக, தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக சோசியல் மீடியாவில் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

குறிப்பாக, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் “#GetOutRavi” என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 

முக்கியமாக, #StateRights #BANNEET #GoBack_TNGovernor ஆகிய ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

அத்துடன், “நீட் தேர்வு ஏழை மாணவர்களை பாதிக்கிறது என்பதால் அதனை ரத்து செய்ய கோரி” ஏராளமான மாணவர்கள் தற்போது வெளிப்படையாகவே முழங்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.