நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் ஒரே அணியாக திரண்ட ஒட்டுமொத்தமாக ஆளுநருக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

அதன்படி, ஆளுநர் ரவிக்கு, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் யார் யார் என்னென்ன கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய  நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 5 ஆம் தேதி நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும். 

பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு நாளில், 'ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?' என்று, அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை இன்று நான் எண்ணிப் பார்க்கிறேன்” என்று, நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒருகிணைப்பாளர்

“நீட் ரத்துக்கு திமுக அரசின் நடவடிக்கை தேவை என்றும், நீட் தேர்வு ரத்துக்கு முதல்வர் தனி கவனம் செலுத்தி மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்” என்றும், அதிமுக ஒருகிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வலியுறுத்தி உள்ளார்.

வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

“நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல” என்று, குற்றம்சாட்டி உள்ளார்.

கே. எஸ் அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

“நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழகத்தில் உள்ள ஏழை எளிய  மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். ஆளுநரின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று, தெரிவித்து உள்ளார்.

திருமாவளவன், விசிக தலைவர்

“நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டு மக்களை அவமதித்த ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்” என்று, வலியுறுத்தி உள்ளார். 

“மாநில அரசின் மசோதாக்களை டெல்லி அனுப்புவது தான் ஆளுநரின் பணி என்றும், அதன் மீது முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு” என்றும், விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்து உள்ளார். நீட் விலக்கு மசோதாவை திருப்பு அனுப்பியதான் மூலம் தமிழ்நாட்டு மக்களையும், சட்ட பேரவையையும் ஆளுநர் அவமதித்து விட்டார்” என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர்

“நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது. திருப்பி அனுப்புவதற்காக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி  கூறியுள்ள காரணங்கள் தேவையற்றவை” என்றும், அவர் விமர்சித்து உள்ளார்.

சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
 
“ஒற்றைப் பெருங்குரலெடுத்து போராடி வரும் தமிழர்களின் தன்மானத்தையும், இனமானத்தையும் உரசிப்பார்ப்பதாக ஆளுநரின் அறிவிப்பு உள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு தரக்கோரி தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட வரைவுக்கு ஒப்புதல் தரமறுத்து திருப்பியனுப்பிய தமிழக ஆளுநரின் செயல்பாடு பேரதிர்ச்சி அளிக்கிறது; ஆளுநரின் இந்த முடிவு பெரும் ஜனநாயகப் படுகொலை” என்றும், சீமான் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

குறிப்பாக, “மாநில இறையாண்மைக்கு சவால் விடும் எழுவர் விடுதலை மற்றும் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இனியும் தமிழ்நாடு அரசு தாமதிக்கக்கூடாது” என்றும், சீமான் காட்டமாக கருத்து தெரிவித்து உள்ளார்.

முத்தரசன், சிபிஐ மாநிலச் செயலாளர்

“நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிரானது என்றும்,  தமிழ்நாடு அரசு மீண்டும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளார். 

கே.பாலகிருஷ்ணன், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்

“நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் 5 மாத காலம் ஆளுநர் காத்திருந்தது ஏன்?” என்று, கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜி.கே. வாசன், தமாக தலைவர்

“நீட் தேர்விற்கு ஒரு இறுதியான முடிவு விரைவில் கிடைக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நியாமான எதிர்பார்ப்பானது” என்று, கருத்து கூறி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம்

“நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதான் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை ஆளுநர் அவமதித்து விட்டர். ஆளும் கட்சிக்கு எதிரான மோதல் போக்கை மக்களுக்கு எதிராக மாற்றி, தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம்” என்று, மக்கள் நீதி மய்யம் தெரிவித்து உள்ளது.

கனிமொழி, திமுக எம்பி

“சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பி இருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. மாநிலத்தின் உணர்வை மதிக்காமல் அதன் உரிமையைப் பறிக்கும் நிலை- ஜனநாயகத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறது” என்று, வேதனை தெரிவித்து உள்ளார்.

டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.

“மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத ஆளுநர் தமிழகத்தில் இருந்து என்ன பயன்? மக்களின் கோரிக்கைகளை மதிக்காத ஆளுநர் ஏதற்கு? அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவர் கூறியதை நானும் நினைவுகூற விரும்புகிறேன். 'ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் ஏன்?' என்று, அறிஞர் அண்ணா அன்றே கேட்டார். ஆளுநரின் இந்த செயல் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று, டி.ஆர்.பாலு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.

திருச்சி சிவா, திமுக எம்.பி.

“ஒரு மாநில சட்டமன்றம் அனுப்ப கூடிய மசோதாவை ஒரு ஆளுநர் எப்படி திருப்பி அனுப்ப முடியும்?” என்று, திருச்சி சிவா கேள்வி எழுப்பி உள்ளார். 

மேலும், “நீட் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் அனுப்பிய மசோதாவை திருப்பி அனுப்பி ஆளுநர் அவமானப்படுத்துகிறார். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் நாளை இதே நிலை ஏற்படலாம். ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்றும், குற்றம்சாட்டி உள்ளார்.

ஜோதிமணி, காங்கிரஸ் எம்.பி.

“ஏழை மாணவர்கள் படிக்கவே கூடாது என்ற எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது” என்றும், பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

மா.சுப்பிரமணியன், தமிழக சுகாதரத்துறை அமைச்சர் 

“ஆளுநர் நீட் தேர்வு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது, தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று, குற்றம்சாட்டி உள்ளார்.

“இதன்மூலம் ஆளுநர் பாஜக பிரதிநிதி போல செயல்படுகின்றார். இந்த நீட் தேர்வால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆகவே நீட் குறித்து இனி எந்த ஒரு உயிர் சேதமும் இருக்க கூடாது” என்றும், வலியுறுத்தி உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.

“நீட் விலக்கு மசோதா, ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத் தொகுப்பு; ஏ.கே.ராஜன் அறிக்கை மூலம் பிற மாநிலத்தவரும் இதை உணரும்போது ஆளுநருக்கு தெரியாமல் போனது ஏன்?” என்று, கேள்வி எழுப்பி உள்ளார்.

“நம் கல்வி, மருத்துவம், சமூக நீதியின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ள கோட்டை என்பதை ஆளுநர் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்றும், உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்து உள்ளார். 

சி.வி.சண்முகம், அதிமுக முன்னாள் அமைச்சர்

“ஆளுநருக்கு நீட் விலக்கு தீர்மானத்தை திருப்பி அனுப்புங்கள். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைபாடு. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்பதைத்தான் எங்கள் ஆட்சியில் வலியுறுத்தியிருந்தோம்” என்று, கூறியுள்ளார்.

வன்னி அரசு, விசிக

“நீட் தீர்மானத்தை நிராகரித்த ஆளுநரை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்” என்று, வன்னி அரசு வலியுறுத்தி உள்ளார்.

வானதி சீனிவாசன், பாஜக எம்எல்ஏ

“மாநில அரசு அனுப்பும் அனைத்து விஷயங்களையும் எந்த பரிசீலனையும் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு கிடையாது என்றும், அவ்வாறு செய்வதற்கு ஆளுநர் ஒன்றும் தபால்காரர் அல்ல. மசோதாவில் இருக்கும் விஷயங்கள் குறித்து தெளிவு பெறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது” என்றும், விளக்கம் அளித்து உள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் நீட் தேர்விற்கு எதிராக நின்று, தமிழக ஆளுநருக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக மட்டும் நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்து, தமிழக ஆளுநருக்கும் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.