தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி, திமுகவுக்கு இந்த தேர்தல்தான் இறுதித் தேர்தல் என்கிற நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் என்று கூறி உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 தினங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்துக் கட்சித் தலைவர்களும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் போட்டியிடும் அமைச்சர் சிவி சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். 
அப்போது பேசிய அவர், ''திமுக தலைவர் ஸ்டாலின் நம் மீதும், கூட்டணி கட்சித் தலைவர்கள் மீதும் குற்றம் கூறி வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மூடுவிழா காணும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். 10 ஆண்டுகாலம் வனவாசம் போயிருந்தார்கள். திமுக இன்னும் திருந்தவில்லை. இந்த தேர்தல் தான் அவர்களுக்கு இறுதி தேர்தல் என்று மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்'' என்றார்.