அதிமுக கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று, தற்போது வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

2021 தமிழக தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகத்தின் எல்லா அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், “தமிழக சட்ட மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியானது, கிட்டத்தட்ட 122 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும்” என்று, ஜனநாயக கூட்டமைப்பான Democracy Network தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக, ஜனநாயக கூட்டமைப்பு மற்றும் உங்கள் குரல் அமைப்பு ஆகியவை இணைந்து, தமிழகம் முழுவதும் கருத்துக் கணிப்புகளை நடத்தி, தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை தற்போது வெளியிட்டு உள்ளது.

அதன் படி, மார்ச் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.

இப்படியாக, கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் பெறப்பட்ட கருத்துக் கணிப்புகளைத் தொகுத்து, அதன் முடிவுகள் தற்போது மண்டலம் வாரியாக  வெளியிடப்பட்டு உள்ளன.

இதில், கொங்கு மண்டலம் எப்போதும் போலவே, இந்த முறையும் அதிமுகவின் கோட்டையாகவே இருப்பது நிரூபணம் ஆகி உள்ளது.

அதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் அதிமுக கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று, கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

அதே போல், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தில் 34 இடங்களில் நிச்சயம் பெற்றி பெறும் என்றும், கூடுதலாக 8 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தஞ்சாவூர், திருச்சி, தென் ஆற்காடு உள்ளிட்ட மாவட்டங்களைக்கொண்ட சோழ மண்டலத்தில் அதிமுக 21 தொகுதிகள் வரை கைப் பற்றும் என்றும், அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், மதுரையைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வரும் பாண்டிய மண்டல்தில் 26 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்றும், அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த பாண்டிய மண்டலத்தில் அமமுக கூட்டணியானது, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும் என்று, கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த தேர்தல் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ள கருத்து என்ன வென்றால், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் விவசாயியாகப் பார்ப்பது” முக்கிய காரணியாக அமைந்து உள்ளது.

அதே போல், கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடியானது அதிமுக கூட்டணிக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் என்றும், அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.