ஆயிரம் விளக்கில் நடிகை குஷ்புவுக்கு அதிகரிக்கும் மவுசு காரணமாக, இது வரை திமுக கோட்டையாக இருந்த பகுதி தற்போது தவிடு பொடியாக போகும் அளவுக்கு மாறி இருக்கிறது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி வசித்த கோபாலபுரம், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்திக், ராதா ரவி என முக்கிய சினிமா பிரபலங்கள் வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கியதால் ஆயிரம் விளக்கு தொகுதி எப்போதும் கவனம் பெறும் தொகுதியாக உள்ளது. 

நட்சத்திர தொகுதியான ஆயிரம் விளக்கில் திமுக 10 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 5 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் கோட்டை என அழைக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியை இந்த முறை முற்றிலும் தன் வசப்படுத்தியிருக்கிறார் பாஜக வேட்பாளரான நடிகை குஷ்பு. 

இந்த முறை பாஜக பலமான பல நட்சத்திர வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ள போதிலும்; ஊடகங்கள், சோசியல் மீடியாக்கள் என ஒட்டு மொத்த கவனமும் அக்கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் இறங்கியுள்ள நடிகை குஷ்பு மீது குவிந்துள்ளது. அதற்கு காரணம், இன்று வரை முன்னணி நடிகை என்ற பந்தா துளியும் இல்லாமல், மக்களோடு, மக்களாக கலந்து “நானும் உங்கள் வீட்டு பெண் தான்.. ஒரு சகோதரியாக எண்ணி எனக்கும் வாய்ப்பளியுங்கள்” என்று, கரம் கூப்பி வணங்கும் குஷ்புவின் பணிவும், ஆண்கள் மட்டுமே கோலோச்சும் அரசியல் களத்தில் எவ்வித பின்புலமும் இல்லாமல் பல சவால்களை கடந்து முதன் முறையாகத் தேர்தலை சந்திக்க களமிறங்கியிருக்கும் குஷ்புவின் துணிவும் தான் அனைவரது கண்களுக்கும் அவர் மட்டும் தனித்துத் தெரிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல், புரட்சித் தலைவி ஜெயலலிதாவிற்கு அடுத்ததாக போயஸ் கார்டன் ஏரியாவில் உலவி வரும் குஷ்புவை அடுத்த அயர்ன் லேடியாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள். ஒரு  புறம் குளு குளு ஏசியில் சொகுசாக வசிக்கும் நட்சத்திரங்களும், மறுபுறம் அனலில் இட்ட புழுவாய் தினமும் இன்னலுறும் சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கலந்து வசிக்கும் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முறையாக களமிறங்கியதோடு மட்டுமல்லாது, “தோல்வி என்ற வார்த்தைக்கு என் அகராதியிலேயே இடம் கிடையாது” என்று, சொல்ல தனி தைரியம் வேண்டும். அந்த வார்த்தையை அவர் எல்லா இடங்களில் சொல்லி வருகிறார். இந்த தைரியம் குஷ்புவிடம் இருக்கிறது.
        
கவர்ச்சி திட்டங்களோ, போலி வாக்குறுதிகளோ, ஜோடனை பேச்சுக்களோ இல்லாமல், மக்களுக்கு அடிப்படையாக எது தேவை என்பதை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்ற உறுதியோடு களமாடி வருகிறார் நடிகை குஷ்பு. பல ஆண்டுகளாக திமுக ஆட்சி செய்த ஆயிரம் விளக்கு தொகுதியில் ஏழைக் குழந்தைக்களுக்கு கல்வி என்பது இன்றளவும் எட்டக்கனியாகவே உள்ளது அப்பகுதியை சேர்ந்த குஷ்புவிடம் கூறிய நிலையில், “சிறு வயது முதலே வறுமையும், ஏமாற்றங்களையும் அறிந்தவள் நான், கல்வி குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். அதனால் அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி தரம் உயர பாடுபடுவேன்” என்றும், அவர் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

“ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வாக்கு சேகரிக்க செல்லும் போது, ஒரு குடும்பத் தலைவியாக, பெண்ணாக, இரு குழந்தைகளின் தாயாக அந்த பகுதி மக்கள் படும் கஷ்டங்களை என்னால் நன்கு உணர்ந்துகொள்ள முடிகிறது என்றும், கல்விக்கு அடுத்தபடியாக அப்பகுதி மக்களுக்கு இன்றியமையாத தேவையாக இருப்பது சுகாதாரம் என்றும், தேங்கி கிடக்கும் குப்பைகளும், கழிவு நீர் சூழ் வீடுகளும் என்ற நிலையைப் பார்க்கும் போதே மனம் பதறுகிறது என்றும், நான் வெற்றி பெற்ற முதல் நாளில் இருந்தே சுத்தமும், சுகாதாரமும் கொண்ட பகுதியாக ஆயிரம் விளக்கு தொகுதி மாறும்” என்றும் அவர் வாக்குறுதி அளித்து வருகிறார்.

அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சனைகளை அக்குவேறு ஆணிவேராக அறிந்து கொண்டு களத்தில் இறங்கியுள்ள குஷ்புவிற்கு மக்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்றும், அப்பகுதியில் காணமுடிகிறது. ஆயிரம் விளக்கு தொகுதி மக்களே சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அதனால், திமுக கோட்டை இனி குஷ்புவின் கோட்டையாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதையும், தேர்தல் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்..