“திமுகவினர் மக்களை மறந்ததால், பொது மக்களும் திமுக கட்சியையே மறந்துவிட்டனர்” என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

இந்த தேர்த் சுற்றுப் பயணத்தில், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் படி, இன்றைய தினம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுப் பயணம் செய்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களான பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்கிறார்.

அத்துடன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், ராயக்கோட்டை ஆகிய இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் இன்று காலை 11 மணிக்கு மேல், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, மதியம் 12 மணிக்கு மேல் பென்னாகரத்தில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்துத் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 

இதனையடுத்து, மதியம் 1 மணிக்கு மேல் தர்மபுரி 4 ரோட்டில் பாமக வேட்பாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.

மேலும், மாலை 4 மணிக்கு காரிமங்கலம் ராமசாமி கோவில் அருகில் உள்ள பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார். 

அதன் பிறகு, மாலை 5 மணிக்கு மொரப்பூரில் அரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வே.சம்பத்குமாரை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதனையடுத்து, இன்று மாலை 6 மணிக்கு மேல் ஒடசல்பட்டி கூட்டு ரோட்டில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கோவிந்தசாமியை ஆதரித்து முதல்வர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். அதன் தொடர்ச்சியாக, அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் வருகிறார். இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் தங்கிவிட்டு, நாளைய தினம் கரூர் மாவட்டத்தில் முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

அதே போல், நேற்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர், கலசப்பாக்கம், திருவண்ணாமலை, செங்கம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அதிமுக இந்தத் தேர்தலோடு காணாமல் போய்விடும் என்று மு.க.ஸ்டாலின் பேசுகிறார்” என்று குறிப்பிட்டு,   “வந்து பாருங்கள், வரும் வழி முழுவதும் கடல் அலைபோல் கூட்டம் காணப்படுகிறது” என்று, ஸ்டாலினுக்கு பதில் சொல்லும் விதமாகப் பேசினார்.

அத்துடன், “குறுக்கு வழியில் புகுந்து முதலமைச்சரானவர் கலைஞர் கருணாநிதி என்றும், தகுதியில்லாத தலைவர் என்றால் அவர் ஸ்டாலின் தான்” என்றும், முதலமைச்சர் மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

“இந்தியாவிலேயே 100 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்த மாநிலம் தமிழ்நாடு என்றும், நலிவடைந்த தொழிலாளர்களை நிமிரச் செய்த அரசு, அதிமுக அரசு என்றும்; சட்டம், ஒழுங்கில் சிறப்பாக செயல்படுவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே” என்றும், அவர் பெருமையோடு குறிப்பிட்டார்.

குறிப்பாக, “நான் 4 வருடம் 2 மாதங்கள் மக்களின் ஆதரவோடு முதலமைச்சராக இருந்தேன்” என்று குறிப்பிட்ட முதலமைச்சர், “ஆனால், இதுவரையில் ஒரு அலுவலரைக்கூட மிரட்டியது கிடையாது என்றும், ஆனால் தற்போதே ஸ்டாலின் அலுவலர்களை மிரட்டுகிறார், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் அரசு அலுவலர்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு வந்துள்ளது” என்றும், அவர் தெரிவித்தார். 

மேலும், “திமுகவினர் மக்களை மறந்ததால், மக்கள் அனைவரும் திமுக கட்சியையே மறந்துவிட்டதாக” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முக்கியமாக, “திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவர்களது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்க முடியவில்லை என்பதால், அதிமுகவை குறை சொல்கின்றனர்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.