“மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான், தமிழகம் வளர்ச்சியடையும்” என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து உள்ளார். 

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் மிக தீவிரமாக சூராளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் படி, நேற்றைய தினம் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, ஜெயங்கொண்டத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயி, விவசாயத் தொழிலாளி ஆகிய இருவரையும் இரு கண்களைப் போன்று அதிமுக அரசு பாதுகாத்து வருவதாக” குறிப்பிட்டார்.

“அதிமுக கூட்டணி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி என்றும், திமுக தலைமையிலான கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி” என்றும், முதலமைச்சர் விமர்சித்தார்.

அதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடி பணிந்து செல்கிறது என்று, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு குறிப்பிட்டு, அதற்குப் பதில் அளிக்கும் விதமாக விளக்கமும் அளித்தார். 

“ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் போல மத்திய - மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் தான், தமிழகத்துக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வர முடியும்” என்று, விளக்கம் அளித்தார்.

அத்துடன், “மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான், மாநில அரசு வளரும் என்றும், அதன் படி தமிழகம் வளர்ச்சியடையும்” என்றும், விளக்கம் அளித்தார்

இதனையடுத்து, பண்ருட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சி திமுக” என்று, மிக கடுமையாக விமர்சனம் செய்தார். 

குறிப்பாக, “10 ஆண்டுகள் வன வாசத்தில் இருந்தும் திமுக திருந்தவில்லை” என்றும், முதலமைச்சர் பகிரங்மாக குற்றம்சாட்டினார்.

முக்கியமாக  “நான் எவ்வளவு வெயில் அடித்தாலும் நிற்பேன், ஆனால், ஸ்டாலின் நிற்பாரா?” என்றும், எடப்பாடி பழனிசாமி கேள்வியாக எழுப்பினார்.

மேலும், “தேர்தல் பரப்புரையில், மக்கள் பிரச்சினைகளைப் பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுவதில்லை” என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி இலவச வாஷிங் மெஷின் உள்பட அனைத்து அறிவிப்புக்களும் ஒவ்வொன்றாக அப்படியே நிறைவேற்றப்படும்” என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கைத் தெரிவித்தார்.