திருடச் சென்ற வீட்டில் அயர்ந்து தூங்கிய திருடனைப் பார்த்து, வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியினர் கடும் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை நங்கநல்லூர் தில்லைகங்கா நகரை சேர்ந்த 58 வயதான சேகர் - 55 வயதான ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். (55). கோவையை சேர்ந்த இந்த தம்பதியினர், சென்னையில் தங்கி சமையல் வேலை செய்து வருகின்றனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், வழக்கம் போல் அந்த தம்பதியினர் சமையல் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது, அந்த வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அந்த தம்பதியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், ஒரு வித பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு இன்னும் அவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

மேலும், அந்த பீரோவின் அருகில் ஒருவர் அளவுக்கு அதிகமான மது போதையில், அங்கேயே தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

இதனைப் பார்த்த தம்பதியினர் இருவரும் கடும் அதிர்ச்சியடைந்து, கூச்சலிட்டு உள்ளனர். இதனால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அங்கு பார்த்து உள்ளனர்.

இதனையடுத்து, எல்லோருமாக சேர்ந்த அந்த நபரை எழுப்பி உள்ளனர். ஆனாலும், அந்த நபர் எழாமல் மது போதையில் மயங்கிக் கிடந்தது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், அவர் ஆலந்தூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த 36 வயதான நாகராஜ், என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, நாகராஜிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, அவர் திருடும் நோக்கில் இந்த வீட்டிற்கு வந்ததாகவும், ஆனால் மது போதையில் மயங்கி அப்படியே தூங்கி விட்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குறிப்பாக, அவர் இதுவரை எத்தனை வீடுகளில் திருடியிருக்கிறார், திருடிய பொருட்கள் எல்லாம் எங்கே வைத்திருக்கிறார்? இவரின் திருட்டுக்கு வேறு யாரும் உடந்தையாக இருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கல்லூரி பேராசிரியையின் வீட்டில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் புகுந்து, சுமார் 52 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே, கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.