மத்திய அரசு கொண்டு வந்துள்ள  மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆகியும் இதுவரை மத்திய அரசு புதிய சட்டங்களை திரும்ப பெறவில்லை. பேச்சு வார்த்தையும் தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகிறது.


இந்நிலையில் ,  வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடும் முழுவதும் ஆதரவு போராட்டம் நடந்து வருகிறது. இந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களும் அதானி, அம்பானி ஆகியோருக்கு சாதகமாக இருக்கிறது எனவும் பெரிய முதலாளிகளுக்காக கொண்டு வரப்பட்டு இருக்கிறது எனவும் விவசாயிகள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். 


அதனால் புதுச்சேரியில் உள்ள அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் விற்பனையகத்தை, எம்.பி ரவிக்குமார் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


வேலூரில் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

பெரம்பலூரில், தி.மு.க சார்ப்பில் உண்ணாவிரதப்போராட்டத்தை, பெரம்பலூர்  மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில், 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  இதில் காங்கிரஸ் கட்சி, மக்கள் நீதி மையம்,  இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். 


புதுக்கோட்டையில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினரின் மூன்று நாள் காத்திருப்பு போராட்டத்தை இன்று முதல் தொடங்கி இருக்கிறார்கள். ஆட்சியர் அலுவலகம் அருகே உண்டு உறங்கி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.  இன்று தொடங்கிய இந்தப் போராட்டம் நாளை மறுநாள் வரை நடைபெறும் என அறிவித்து இருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் திமுக,  காங்கிரஸ்,  மதிமுக , கம்யூனிஸ்ட் கட்சிகள் மாதர் சங்கத்தினர் மாணவர் சங்கத்தினர் வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் . மேலும் திண்டுக்கல், கோவை, தஞ்சை ஆகிய ஊர்களிலும் அரசியல் கட்சிகள் போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். 


இவ்வாறு டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஒரு அங்கமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகளும் , அமைப்புகளும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியில் முடிந்துள்ளது. புதிய சட்டங்களின் திருத்தங்கள் செய்யப்படும்;  இதை  எழுதிக்கூட தருகிறோம். போராட்டத்தை கைவிடுங்கள் என்று அமித்ஷாவுடனான பேச்சுவார்த்தையில் மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், கொண்டு வந்த புதிய சட்டங்களை முழுவதுமாக திரும்ப பெற வேண்டும். திருத்தங்கள் செய்வதில் எந்த பயனும் இல்லை. எனவே முழு சட்டத்தையும் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகள் கூறிவருகிறார்கள்.